×

மீண்டும் பீதியூட்டும் தொப்பூர் கணவாய் தொடரும் கோர விபத்து அபாயங்களால் அதிர்ச்சியில் உறையும் வாகன ஓட்டிகள்

* உயிர்பலிகளோடு பொருட்சேதம் அதிகரிப்பு   
* தேவை பாதுகாப்பான பயணத்திற்கு வழிகள்

தர்மபுரி: தர்மபுரி-சேலம் மாவட்டத்தின் எல்லையாக தொப்பூர் கணவாய் உள்ளது. மலைக்குன்றுகள் சூழ்ந்த தொப்பூர் கணவாயின் வழியாக கன்னியாகுமரி- காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை உள்ளது. வாகனங்கள் பல்வேறு சவால்களை சந்தித்து தினசரி செல்கின்றன. தமிழகத்தில் இருந்து வடமாநிலத்திற்கும், வடமாநிலத்தில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கும் கனரக வாகனங்கள் சரக்குகள் ஏற்றிசெல்லும் முக்கிய சாலையாக தொப்பூர் கணவாய் உள்ளது. பல ஆயிரக்கணக்கான வாகனங்கள் தினசரி கடந்து செல்வதால், கட்டுப்பாட்டை இழந்து தினசரி வாகன விபத்து நடக்கிறது. சமீபகாலமாக விபத்து அதிகரித்துள்ளது. டோல்கேட்டில் இருந்து தொப்பூர் இரட்டை பாலம் வரை 8 கிலோ மீட்டர் தூரம் சாலை இறக்கமும், வளைந்தும் சாலை செல்கிறது. இதில் குறிப்பாக, தொப்பூர் கணவாயில் 4 கிலோ மீட்டர் தூரம் மிகவும் அபாயகரமான வளைவுகள் கொண்ட சாலையாக உள்ளது. கடந்த 12ம்தேதி ஆந்திராவில் இருந்து சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி 12 கார், ஒரு மினி சரக்கு வேன், டூவிலர் என மொத்தம் 15 வாகனங்கள் மீது மோதியது. இதில் 4 பேர் உயிரிழந்தனர். 27 பேர் காயம் அடைந்தனர். கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் ஏற்பட்டது. இந்த விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் தூரத்தில் 2 லாரிகள் விபத்தில் சிக்கி 2 பேர் காயம் அடைந்திருந்தனர். கடந்த 9 ம்தேதி இதே தொப்பூர் கணவாயில் 4 லாரி, 9 கார்கள் விபத்தில் சிக்கின. இதில் 20 பேர் காயம் அடைந்திருந்தனர். பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்திருந்தது.

கடந்த 17ம் தேதி 3 வாகனங்கள் விபத்தில் சிக்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தற்போது விபத்தை தவிர்க்க தொப்பூர் கணவாயில் லாரி, பஸ் 20 கிலோ மீட்டர் வேகம், கார் 40 கிலோ மீட்டர் வேகத்தில் தான் செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. தொப்பூர் கணவாயில் விபத்து ஏற்பட்டால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. பெரிய விபத்து என்றால் இருபுறமும் 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேல் வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தொப்பூர் கணவாய் மீண்டும் பீதியூட்டும் இடமாகவே மாறிவருகிறது. உயிர் பலிகளோடு பொருட்சேதமும் அதிகரித்துள்ளது. எனவே பாதுகாப்பான பயணத்திற்கு வழிகள் ஏற்படுத்தி தரவேண்டும் என ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். நடப்பாண்டு ஜனவரி முதல் டிசம்பரில் தற்போது வரை 230 விபத்துக்கள் நடந்துள்ளது. இதில் 42 பேர் உயிரிழந்துள்ளனர். 300க்கும் மேற்பட்ட நபர்கள் காயம் அடைந்துள்ளனர். விபத்து குறைக்க மாவட்ட நிர்வாகம், காவல்துறை பல்வேறு நடவடிக்கை எடுத்தும் பலன் அளிக்காமல் சமீபகாலமாக தினசரி விபத்து நடக்கிறது. விபத்தை கட்டுப்படுத்த முடியாமல் அதிகாரிகள் திணறி வருகின்றனர். தொப்பூர் கணவாயில் விபத்தை தவிர்க்க நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

6 வழிச்சாலையாக மாற்ற நடவடிக்கை
அதிகாரிகள் கூறுகையில், ‘‘தொப்பூர் கணவாயில் விபத்துக்கான காரணங்களை கண்டறிந்து, அதனை குறைப்பதற்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வெளி மாநிலத்தில் இருந்து முதன்முறையாக தொப்பூர் கணவாயில் வாகனத்தை ஓட்டி வரும்  டிரைவர்களே விபத்தை ஏற்படுத்துகின்றனர். ஒருமுறைக்கு மேல் வந்து சென்ற டிரைவர்கள் விபத்தை ஏற்படுத்துவதில்லை. டோல்கேட் மற்றும் எஸ் வடிவ வளைவுகளில் ஒலிபெருக்கி வைத்துள்ளோம். அதில் அபாய வளைவு குறித்து இடைவிடாமல் விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். தொப்பூர் கணவாய் பகுதியில், நேர் வழிச்சாலை அமைக்க அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், தர்மபுரி- நாமக்கல் வரையுள்ள 4 வழிச்சாலையானது 6 வழிச்சாலையாக மாற்றப்படவுள்ளது. இதற்கான திட்டம் தயாரித்து அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது,’’ என்றனர்.


Tags : Motorists ,crash , Naga, occupation grip, charitable temple, pools
× RELATED வாகன ஓட்டிகளிடம் வசூல் வேட்டை வீடியோ...