×

நெல்லையில் ஸ்மார்ட் சிட்டி நிதி வீணடிக்கப்படுகிறதா? குறுகிய சாலைகளில் டிவைடர்கள் அமைப்பு: போக்குவரத்து பாதிப்பு

நெல்லை: நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களில் குறுகிய சாலைகளில் அமைக்கப்பட்டு வரும் டிவைடர்கள் காரணமாக கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டிக்கான நிதி வீணடிக்கப்படுவதோடு, வாகன ஓட்டிகள் சாலையை பயன்படுத்த முடியாத நிலையும் உருவாகி வருகிறது. நெல்லை மாநகராட்சி நெல்லை, பாளையங்கோட்ைட, தச்சநல்லூர், மேலப்பாளையம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியது. இந்த நான்கு மண்டலங்களிலும் 55 வார்டுகள் உள்ளன. இதில் 4 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். நெல்லை மாநகரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.999 கோடி மதிப்பீட்டில் பல்வேறு பணிகள் நடந்து வருகின்றன.

நெல்லை புதிய பஸ் நிலையம், சந்திப்பு பஸ் நிலையங்கள் புதுப்பிப்பு, பொருட்காட்சி மைதானத்தில் வர்த்தக அரங்கம், பாளையங்கோட்டை பஸ் நிலையம் புதுப்பிப்பு, டவுன் மார்க்கெட் என காணும் இடமெல்லாம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கான பணிகள் தென்படுகின்றன. இதனால் உருப்படியாக ஒரு பஸ்நிலையம் இன்றி, வாகன போக்குவரத்திற்கு தகுதியான ஒரு சாலையின்றி பொதுமக்கள் தினமும் படும்பாடு சொல்லிமாளாது. நெல்லை மாநகருக்குள் எந்தவொரு சாலையில் பயணித்தாலும் போக்குவரத்து நெருக்கடி இயல்பாக காணப்படும். அதிலும் மழைக்காலங்களில், குண்டும், குழியுமான சாலைகளால் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் சமீபகாலமாக ஸ்மார்ட் சிட்டி நிதியை செலவழிக்கிறோம் என்கிற பெயரில் குறுகிய சாலைகளில் கூட மாநகராட்சி டிவைடர்கள் அமைத்து வருகிறது. பாளை பெருமாள்புரம் சாலை, அன்பு நகர் சாலை, சாராள் தக்கர் கல்லூரி செல்லும் 60 அடி சாலை ஆகியவை இவற்றில் முக்கியமானதாகும். பாளை. பெருமாள்புரம் ஆம்னி பஸ்நிலையத்தில் இருந்து பாரத ஸ்டேட் பாங்க் வரை செல்லும் 40 அடி சாலையில் சமீபத்தில் டிவைடர்களை அமைத்துள்ளனர். சாலையின் நடுப்பகுதியை டிவைடர்கள் அடைத்துக் கொள்வதால், வாகனங்கள் மெல்ல மெல்ல ஊர்ந்து செல்கின்றன. சாலையின் பல இடங்களில் பழக்கடை மற்றும் உணவகங்களின் ஆக்கிரமிப்புகள் காணப்படுவதால், வாகனங்கள் செல்லவே முடிவதில்லை.

ஆக்கிரமிப்புகளை அகற்றாமலும், சாலையை விஸ்தரிக்காமலும் பெருமாள்புரம் 40 அடி சாலையில் டிவைடர்கள் அமைக்கப்பட்டதால் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. மேலும் இந்தச் சாலையும் 20 அடிக்கு ஒரு இடத்தில் உடைக்கப்பட்டுள்ளது. இதனால் வாகனங்களே செல்ல முடியாத அளவிற்கு உள்ளது. மேலும் அன்புநகர் செல்லும் சாலையிலும் டிவைடர்கள் அமைக்கப்ட்டுள்ளன. பெருமாள்புரம் சாலையை விஸ்தரிக்க அங்குள்ள 57 மரங்களை வெட்டப்போவதாக மாநகராட்சி கூறி வருகிறது. பசுமை சூழலுக்கும், சுற்றுச்சூழலுக்கும் வசதியாக காணப்படும் அம்மரங்களை வெட்டக்கூடாது எனக்கூறி திமுக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் ஏற்கனவே அதிகாரிகளிடம் மனு அளித்தனர்.

இருப்பினும் முதற்கட்டமாக அங்கிருந்து 5 மரங்கள் வேரோடு அகற்றப்பட்டு வேய்ந்தான்குளம் பகுதியில் நடப்பட்டன. மீதமுள்ள மரங்களையும் மாநகராட்சி விரைவில் அகற்றப்போவதாக அறிவித்துள்ளது. இச்சாலையில் காணப்படும் மின்கம்பங்களை அகற்ற காலதாமதம் ஆவதால், போக்குவரத்து நெருக்கடியான நேரத்தில் வாகனங்கள் அதன் மீது மோதும் அபாயமும் உள்ளது. இதேபோல் அன்புநகர் காமராஜ் சாலையிலும் டிவைடர்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதனால் அச்சாலையிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகமாகி வருகிறது. அன்புநகர் ஹவுசிங் போர்டு காலனியில் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், அவர்கள் அவசரத்திற்கு வெளியே செல்ல, அரைகிலோ மீட்டர் சுற்றியே சாலையின் மறுபக்கத்திற்கு வர வேண்டியதுள்ளது.

அரசு ஊழியர்கள் நிரம்பிய அன்புநகர் ஹவுசிங் போர்டு காலனியில் பொதுமக்கள் சாலையை கடக்க முடியாத நிலையில் உள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர் செல்வக்குமார் கூறுகையில், ‘‘நெல்லை மாநகராட்சியிடம் சமீபகாலமாக எந்தவொரு விஷயத்திலும் திட்டமிடல் என்பதே இல்லை. ஒரு வேலையை முடித்துவிட்டு, அடுத்த வேலையை தொடங்கினால் யாருக்கும் பாதிப்பில்லாமல் இருக்கும். ஒரே நேரத்தில் அனைத்து பணிகளையும் தொடங்கி, எல்லாவற்றையும் கிடப்பில் போடுவதுதான் மாநகராட்சியின் குறிக்ேகாளாக உள்ளது. 90 அடி சாலையில் மட்டுமே டிவைடர்கள் அமைக்கப்பட வேண்டும் என்ற விதிமுறைகள் இருக்க, நெல்லை மாநகராட்சி 40 அடி சாலையில் கூட அவற்றை அமைத்து, ஸ்மார்ட் சிட்டி நிதியை வீணடிக்கிறது.

குறுகிய சாலைகளில் டிவைடர்கள் அமைத்துக் கொண்டே சென்றால், வாகனங்கள் எப்படி செல்லும் என்பதை அதிகாரிகள் யோசிப்பதில்லை. தரமான பஸ்நிலையம், அகலமான சாலைகள், நிறைவான குடிநீர் ஆகியவற்றை மையப்படுத்தியே ஸ்மார்ட் சிட்டி திட்டம் இருக்க வேண்டும். அதை விடுத்து போக்குவரத்து நெருக்கடியை உருவாக்கி, வாகன ஓட்டிகளை துன்புறுத்துகிற திட்டங்களை கைவிடுவதே நல்லது’’ என்றார். நெல்ைல புதிய பஸ் நிலையத்தில் எஸ்டிசி கல்லூரிக்கு செல்லும் 60 அடி சாலையிலும் டிவைடர்கள் அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. இதனால் என்ஜிஓ பி காலனி, பயோனியர் குமாரசாமி நகர், ராஜ ராஜேஸ்வரி நகர் மக்கள் திண்டாட்டத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

நெல்லை மாநகராட்சிக்கு கொஞ்சமும் சளைக்காமல் நெடுஞ்சாலைத்துறையும் குறுகிய சாலைகளில் டிவைடர்களை அமைப்பதில் ஆர்வம் காட்டி வருகிறது. குறிப்பாக நெருக்கடி மிகுந்த வண்ணார்பேட்டை சாலையில் எம்ஜிஆர் சிலை தொடங்கி டிவைடர்கள் அமைக்கப்பட்டதால், அப்பகுதியில் தினமும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. பலாப்பழ ஓடையை தாண்டிய பின்னர் வாகனங்கள் நகர முடியாமல் தினமும் குறுகிய சாலையில் நெரிசலோடு நிற்கின்றன. எனவே நெல்லை மாநகர பகுதியில் சாலைகளை விஸ்தரித்து, போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வு காண நெல்லை மாநகராட்சியும், நெடுஞ்சாலைத்துறையும் முன் வர வேண்டும்.

சாலைகள் மெருகேறும்
நெல்லை மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘பாளை பெருமாள்புரம் மற்றும்  அன்புநகர் பகுதிகளில் சாலைகளில் டிவைடர்கள் போக்குவரத்தை  ஒழுங்குபடுத்தும் வகையிலே அமைக்கப்பட்டுள்ளன. சாலை ஓரங்களில் காணப்படும்  தெருவிளக்குகளை மட்டும் அகற்றி, அவை மையப்பகுதிகளில் டிவைடர்களுக்கு  மத்தியில் இருப்பதாக அமைத்துவிட்டால் சாலை மெருகேறிவிடும். சாலையின்  இருபுறங்களிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை விரைவில் அகற்றுவோம்’’ என்றனர்.

பிரயோஜனமற்ற திட்டங்களால் என்ன பயன்?
பாளை. பெருமாள்புரத்தை சேர்ந்த 26வது வார்டு முன்னாள் கவுன்சிலர் டேனியல் ஆபிரகாம் கூறுகையில், ‘‘பெருமாள்புரம் 40 அடி சாலையில் டிவைடர்கள் அமைந்ததை தொடர்ந்து எதிர்த்து வருகிறோம். இச்சாலையில் காணப்படும் பல வீடுகளில் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் வீட்டில் இருந்து வெளியே வர முடியவில்லை. பெருமாள்புரம் சாலையில் ஒரு வாகனம் நின்றுவிட்டால், பின்னால் அனைத்து வாகனங்களும் அணிவகுத்து நிற்கின்றன. நடுரோட்டில் டிவைடர்கள் இருக்கும் நிலையில், அவற்றிற்கு கீழே பாதாள சாக்கடை பைப் லைன்கள் உள்ளன. பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டால் அவற்றை சரிசெய்ய எவ்வித முயற்சிகளும் இல்லை.

பெருமாள்புரம் பகுதியில் மட்டுமே தற்போது 15 இடத்தில் பாதாள சாக்கடை அடைப்பு புகார்கள் உள்ளன. சாலையை காரணம் காட்டி அதிகாரிகள் அப்பணிகளை மேற்கொள்ள மறுக்கின்றனர். நெல்லை மாநகராட்சியில் கழிவுநீர் மற்றும் சாக்கடைகளை சீர் செய்ய ஒரு வாகனம் மட்டுமே உள்ளது. டிவைடர்களுக்கு ஒதுக்கிய நிதியை, வேறு உருப்படியான திட்டங்களுக்கு பயன்படுத்தி இருக்கலாம். இத்தகைய வாகனங்களை மண்டலத்திற்கு ஒன்று என வாங்காவது பயன்படுத்தலாம். பிரயோஜனமற்ற திட்டங்களால் மக்களுக்கு என்ன பயன் கிடைத்துவிட போகிறது?’’ என்றார்.

Tags : Smart City ,roads , Is Smart City funding being wasted in Nellie? Dividers system on narrow roads: Traffic impact
× RELATED ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில்...