மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழையால் நிரம்பிய கடனாநதி, ராமநதி அணைகள்: உபரி நீர் வெளியேற்றம்

நெல்லை: மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால் கடனாநதி அணை, ராமநதிஅணைகள் நிரம்பின இதையடுத்து அணைகளில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுகிறது. தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை கடந்த அக் 28ம் தேதி துவங்கியதோடு நவம்பர் முதல் தொடர்ந்து கனமழை பரவலாகப் பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி மாவட்டங்களின் மேற்குத் தொடர்ச்சி மலையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன்காரணமாக அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதில் தென்காசி மாவட்டம் கடையம் அருகே 85 அடி கொள்ளளவு கொண்ட கடனாநதி அணை இந்தாண்டு 4வது முறையாக நிரம்பியதோடு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

இதனைத் தொடர்ந்து உபரி நீரானது அணையில் இருந்து ஆற்றுக்கு திறந்துவிடப்பட்டது. அணையின் பாதுகாப்பு கருதி அணையின் நீர்மட்டம் 83.50 அடியாகவும், நீர்வரத்து 750 கன அடியாகவும் வெளியேற்றம் 750 கன அடியாகவும் இருந்தது. அணை பாதுகாப்பு பணியில் உதவிப் பொறியாளர் கணபதி தலைமையில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர். இதே போல் 84 அடி கொள்ளளவு  கொண்ட கடையம் ராமநதி அணை இந்தாண்டு 5வது முறையாக நிரம்பியது. இதையடுத்து அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அணையின் பாதுகாப்பு கருதி  நீர்மட்டம் 82 அடியில் நிலைநிறுத்தபட்டு அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 90 கன அடியாகவும் உள்ளது.

அணையின் பாதுகாப்பு பணியில் உதவிப் பொறியாளர் முருகேசன் தலைமையில் பணியாளர்கள் ஜோசப், பாக்கியராஜ், துரைசிங் ஈடுபட்டுள்ளனர். இவ்வாறு அணைகளிலிருந்து உபரி நீர் ஆற்றில் திறக்கபட்டுள்ளதால் ராமநதி, கடனா நதி ஆற்றில் வெள்ளம் தரைபாலத்தை தாண்டி கரை புரண்டு ஓடுவது குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>