சர்ச்சை பேச்சு எதிரொலிஅமைச்சர் செல்லூர் ராஜூ வீடு முற்றுகை, ஆர்ப்பாட்டம்: மதுரையில் பரபரப்பு

மதுரை: ஒரு சமுதாயத்தினரை இழிவாகப் பேசியதை கண்டித்து மதுரையில் நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டை, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தி–்ல ஈடுபட்ட யாதவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர்.

மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் செல்லூர் ராஜூ, ஒரு சமூகத்தினர் குறித்து பேசியது பெரும் சர்ச்சைக்குள்ளானது. தமிழ்நாடு யாதவர் இளைஞர் அமைப்பு, யாதவர் ஒருங்கிணைப்பு குழு மற்றும் தமிழ்நாடு யாதவ மகாசபை உள்ளிட்ட அமைப்பினர் நேற்று மாலை அமைச்சர் செல்லூர் ராஜூ வீட்டருகே திரண்டனர். இவர்கள் அமைச்சரின் வீட்டை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இவர்களில் 38 பேரை முதலில் செல்லூர் போலீசார் கைது செய்தனர்.  தொடர்ந்து அடுத்தடுத்து போராட்டங்களில் ஈடுபட்ட மேலும் 20க்கும் மேற்பட்டவர்கள் கைதாகினர்.  போராட்டம் குறித்து வக்கீல் ரகுநாத் கூறும்போது, ‘‘மதுரை செல்லூரில் வீரன் அழகு முத்துகோன் சிலை அமைத்திட இடம் தேர்வு செய்து மாநகராட்சி அனுமதிக்கு கேட்டிருந்தோம். சிலை வைத்தால் போக்குவரத்து நெரிசல் எனக் கூறினர்.

ஆனால், இதே இடத்தில் கபடி வீரர்கள் சிலை வைக்க அமைச்சர் முனைப்புடன் செயல்பட்டார். எங்கள் சமூக எம்பி கோபாலகிருஷ்ணனை ‘அமைதிப்படை அமாவாசை’ என்றார். இப்போது சமூகத்தை இழிவாகப் பேசி விட்டு, மன்னிப்பு கேட்கிறார். தொடரும் இந்த செயல்கள் கண்டிக்கத்தக்கது’’ என்றார். இதேபோல தமிழகத்தில் பல இடங்களில் அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து யாதவர் அமைப்பினர் போராட்டம் நடத்தினர். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் தேரடி திடலில் நேற்று யாதவர் சமுதாயத்தினர் திரண்டு சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர். இதில் சிலர், அமைச்சர் செல்லூர் ராஜூவின் படத்தை திடீரென எரித்தனர். பின்னர் சங்கரன்கோவில் டவுன் போலீசார் அவர்களை தேடி பிடித்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

கலெக்டர் அலுவலகத்தை  முற்றுகையிட முடிவு

தூத்துக்குடியில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை நிறுவன தலைவர் கேப்டன் ராஜன் கூறுகையில், தமிழகத்தில் 1 கோடியே 20 லட்சம் யாதவர்கள் உள்ளனர். ஒவ்வொரு தேர்தலிலும் வேட்பாளர்களின் வெற்றி தோல்வியை அந்தந்த தொகுதிகளிலுள்ள யாதவர்களின் வாக்கு வங்கி தான் தீர்மானிக்கிறது. இப்படிப்பட்ட சூழலில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, யாதவ சமுதாயத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார். அவரின் இந்த செயல் கண்டனத்திற்குரியது. அவர் மீது தமிழக முதல்வர், துணை முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து, அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில் அகில இந்திய யாதவ பாதுகாப்பு பேரவை மற்றும் யாதவ கூட்டமைப்பு சார்பில் 21ம் தேதி (நாளை) மதுரை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடுவோம். மறியல் போராட்டம் நடத்துவோம், தேர்தலில் தகுந்த பாடம் புகட்டிடுவோம், என்றார்.

தெர்மாகோலுக்கு அனுமதி மறுப்பு

திருச்செந்தூரில் யாதவர் இளைஞரணி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், யாதவர் பெருமக்களை இழிவுபடுத்தி பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூவை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் தெர்மாகோலை கொண்டு வந்து கிழித்தெறிய முடிவு செய்தனர். ஆனால் காவல் துறை அனுமதி மறுக்கப்பட்டது. இதில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Related Stories:

>