×

தனியார் மயமாக்கலை எதிர்த்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட மின்துறை ஊழியர்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன?: புதுச்சேரி அரசு விளக்கம் தர ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திடீரென வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட மின் துறை ஊழியர்களுக்கு எதிராக எடுத்த நடவடிக்கை குறித்து விளக்கமளிக்க புதுச்சேரி அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  மத்திய அரசின் தற்சார்பு இந்தியா திட்டத்தின் கீழ், யூனியன் பிரதேசங்களில் மின்  வினியோகத்தை தனியாருக்கு வழங்கும் மத்திய அரசு அறிவிப்பை எதிர்த்து புதுச்சேரி மாநில மின் துறை ஊழியர்கள், கடந்த 4ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஊழியர்களுக்கு எதிராக எஸ்மா சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க கோரி, புதுச்சேரி, முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்துள்ளார்.  அவர் தனது மனுவில், நிவர் புயலால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள புதுச்சேரியில் மின் கம்பங்கள் விழுந்தும், மின் கம்பிகள் அறுந்தும் விழுந்துள்ளன.  மின் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக, இவை சரி செய்யப்படாததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

 இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் பொங்கியப்பன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்பட்டுள்ளதாகவும், சட்டவிரோதமாக போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.  மத்திய அரசு சார்பில் ஆஜரான கூடுதல் தலைமை வக்கீல் சங்கரநாராயணன், மின்சாரம் மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  வழக்கை விசாரித்த நீதிபதிகள், டிசம்பர் 4ம் தேதி முதல் திடீரென சட்டவிரோதமான வேலைநிறுத்தத்தில்  ஈடுபட்டவர்கள் மீது  துறைரீதியாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பியதுடன் இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, புதுச்சேரி துணைநிலை ஆளுநர், புதுச்சேரி தலைமைச் செயலாளர், புதுச்சேரி மின் துறை செயலாளர், மின் துறை தனியார் மயமாக்கல் எதிர்ப்பு குழுவுக்கு உத்தரவிட்டு, விசாரணையை பிப்ரவரி 16ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.


Tags : power sector employees ,strike ,privatization , DOE employees against privatization strike action taken by the High Court order to explain what ?: Puducherry
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...