பேராசிரியை பணி நீக்க விவகாரம்: டிஜிபி, எஸ்பி பதில் தர உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: மன ரீதியாக தொந்தரவு கொடுத்து பணியிலிருந்து நீக்கம் செய்த கல்லூரி மீது கொடுத்த புகார் மீது நடவடிக்கை எடுக்க கோரி கல்லூரி பேராசிரியை தொடர்ந்த வழக்கில் டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி மற்றும் கல்லூரி நிர்வாகம் பதில் தருமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  சென்னை உயர் நீதிமன்றத்தில் ராஜகீழ்ப்பாக்கத்தை சேர்ந்த எஸ்.கயல்விழி தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  அண்ணா பல்கலைக்கழகத்தில் விஎல்எஸ்ஐ பிரிவில் டாக்டர் பட்டம் பெற்றுள்ளேன். இதையடுத்து, சிறுசேரியில் உள்ள முகமது சதக் ஏ.ஜெ. பொறியியல் கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியில் 2018ல் சேர்ந்தேன்.  இந்த நிலையில் கல்லூரிக்கு புதிதாக நியமிக்கப்பட்ட கல்லூரி முதல்வர் சீனிவாசன் என்னுடன் பணியாற்றிய பல உதவி பேராசிரியர்களை கல்லூரியில் இருந்து நீக்கிவிட்டார். எனது பணித்திறன் காரணமாக என்னை கல்லூரியிலிருந்து நீக்க முடியவில்லை. இதையடுத்து, எனக்கு மன ரீதியாக பல்வேறு தொந்தரவுகள் தொடங்கின. இந்த நிலையில் கொரோனா நேரத்தில் என்னை பணியிலிருந்து நீக்கம் செய்துவிட்டனர்.

 இதனால் மன அழுத்தம் அடைந்து கணவர் மற்றும் குழந்தைகளை விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறினேன். பல இடங்களில் வேலை தேடி அலைந்தேன். இந்த நிலையில் சேலத்தில் ஒரு மருத்துவமனையில் வேலை கேட்டு சென்றபோது, என்னிடம் விசாரித்தார்கள். நடந்த விஷயத்தை கூறியவுடன் எனது கணவருக்கு தெரியப்படுத்தினர்.  இதையடுத்து, பல பிரச்னைகளுக்குப்பிறகு சென்னை வந்த நான் செங்கல்பட்டு எஸ்பி மற்றும் மாமல்லபுரம் உதவி எஸ்பியிடம் சம்மந்தப்பட்ட கல்லூரி முதல்வர் மற்றும்  நிர்வாகம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டம் மற்றும் பெண் கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்கு பதியுமாறு கோரி புகார் கொடுத்தேன். அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 எனவே, எனது புகாரை வேறு விசாரணை ஏஜென்சிக்கு மாற்றி எனது புகார் மீது நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவிட வேண்டும்.

 இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.  இந்த மனு நீதிபதி டி.ரவீந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் குற்றவியல் வக்கீல் மனுவுக்கு பதில் தர அவகாசம் கேட்டார். இதை ஏற்ற நீதிபதி, இந்த வழக்கில் பதில் தருமாறு டிஜிபி, செங்கல்பட்டு எஸ்பி, கல்லூரி நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை 6 வாரங்களுக்கு தள்ளிவைத்தார்.

Related Stories:

>