சென்னையில் புதிதாக 350 பூங்கா அமைக்க மாநகராட்சி முடிவு: 1000 இடங்களில் மியாவாக்கி காடுகள்

சென்னை: புதிதாக 350 இடங்களில் பூங்காவும், 1000 ஆயிரம் இடங்களில் மியாவாக்கி காடுகளும் அமைக்க திட்டமிட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னை மாநகராட்சியும், தனியார் தொண்டு நிறுவனமும் இணைந்து ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் மியாவாக்கி நகர்புற அடர் வனம் உருவாக்கும் பணி நேற்று தொடங்கப்பட்டது. இதில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ், வட்டார துணை ஆணையர் ஆகாஷ், நடிகர் விவேக், மருத்துவமனை இயக்குனர் விமலா, ஒருங்கிணைப்பு அலுவலர் ஆனந்த குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அளித்த பேட்டி :10 ஆயிரம் சதுர அடியில் 25 வகையில் 2 ஆயிரம் மரங்களைக் கொண்ட மியாவாக்கி அடர் வனம் உருவாக்கப்பட்டுள்ளன.

திறந்தவெளி நிலங்களில் ஆயிரம் இடங்களில் மியாவாக்கி காடுகளை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை நோக்கி சென்னை மாநகராட்சி பயணித்து வருகிறது. தற்போது 15வது மியாவாக்கி அடர் வனம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது. 675 பூங்காக்கள் தற்போது சென்னை மாநகராட்சியில் உள்ளது. இந்த எண்ணிக்கையை 1000 க்கு மேல் அதிகரிக்கும் பொருட்டு கூடுதலாக 350 பூங்காக்களை சென்னையில் உருவாக்க திட்டங்கள் போடப்பட்டு நடவடிக்கைகள் துவங்கப்பட்டுள்ளது.சென்னை போன்ற மாநகரங்களில் மரங்களின் எண்ணிக்கையை அதிகரித்து வெப்பத்தின் அளவை குறைக்க இதுபோன்ற பூங்காக்களையும் மியாவாக்கி காடுகளை உருவாக்குவதில் மாநகராட்சி முனைப்பு காட்டி வருகிறது. 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நேப்பியர் பாலம் முதல் பருத்திப்பட்டு வரை ஆற்றங்கரை ஓரங்களில் வரிசையாக மரங்களை நடும் முயற்சியும் சென்னை மாநகராட்சி மூலம் துவங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதனைத் தொடர்ந்து பேசிய நடிகர் விவேக், “அரசு மருத்துவமனைகளில் பொதுமக்கள் நிழலில் அமர வேண்டும் என்கிற அடிப்படையில் மாநகராட்சியுடன் இணைந்து இந்த மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த மரங்களை இங்கு நடுவதன் மூலம் கூடுதலாக 2000 மருத்துவர்கள் (மரங்கள்) இணைந்து உள்ளனர்” என்றார்.

Related Stories:

>