தி.நகர் நகை பட்டறையில் 50 சவரன் தங்க, வைர நகைகள் கொள்ளை: வடமாநில ஊழியருக்கு வலை

சென்னை: தி.நகரில் உள்ள நகை பட்டறையில் 50 சவரன் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்ற வடமாநில ஊழியரை போலீசார் தேடி வருகின்றனர். தி.நகர் கிருஷ்ணா தெருவை சேர்ந்தவர் மகாவீர் ஜெயின் (53). அதே பகுதியில் தங்கம் மற்றும் வைர நகைகள் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பரான் சந்திரன் (30), கடந்த ஓராண்டாக வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், மகாவீர் ஜெயின் கடந்த 2 நாட்களுக்கு முன், 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகளை பரான் சந்திரனிடம் கொடுத்து, கடையில் வைக்கும்படி கூறியுள்ளார். நேற்று முன்தினம் காலை பட்டறைக்கு வந்து பார்த்தபோது பரான் சந்திரனிடம் கொடுத்த 50 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள் மாயமானது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

இதுபற்றி விசாரிக்க பரான் சந்திரனை தேடியபோது, அவர் கடையில் இல்லாதது தெரிந்தது. அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது சுவிட்ச்ஆப் செய்யப்பட்டிருந்தது. இதுகுறித்து மகாவீர் ஜெயின் பாண்டிபஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  போலீசார் வழக்கு பதிவு செய்து கடையில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து, தலைமறைவான வடமாநில ஊழியர் பரான் சந்திரனை தேடி வருகின்றனர்.

2 லட்சம் திருட்டு

கோயம்பேடு பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் நோபல் (60). இவர், அதே பகுதியில் அலுவலகம் நடத்தி வருகிறார். நேற்று காலை வழக்கம்போல் அலுவலகத்தை திறக்க வந்தபோது, கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது அலமாரியில் வைத்திருந்த 2 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் கோயம்பேடு போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>