×

கட்சி அமைப்புகளில் பிரச்னை காங்கிரசை பலப்படுத்த சோனியா ஆலோசனை: அதிருப்தி கடிதம் பற்றியும் விவாதம்

புதுடெல்லி: காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி டெல்லியில் நேற்று ஆலோசனை நடத்தினார். மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததை தொடர்ந்து, கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ராகுல் காந்தி விலகினார். இதைத் தொடர்ந்து, சோனியா காந்தி  இடைக்கால தலைவரானார். தொடர்ந்து, மத்தியப் பிரதேசத்தில் முக்கிய தலைவரான ஜோதிராதித்யா சிந்தியா திடீரென கட்சியில் இருந்து விலகியதால் காங்கிரஸ் ஆட்சி பறிபோனது. இந்நிலையில், கட்சியின் 23 மூத்த தலைவர்கள் காங்கிரஸ் தலைமைக்கு கடிதம் எழுதினார்கள். அதில், காங்கிரசுக்கு முழுநேர தலைவர் தேர்வு செய்யப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதன் காரணமாக, கட்சிக்குள் குழப்பம் நீடித்து வந்தது.  இந்நிலையில், கொரோனா நோய் தொற்று அச்சுறுத்தலுக்கு பின் முதல் முறையாக, சோனியா காந்தி தலைமையில் நேற்று  கட்சியின் மூத்த தலைவர்களின் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது.

இதில், முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி, சோனியாவிற்கு கடிதம் எழுதிய மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் குலாம்நபி ஆசாத், துணை தலைவர் ஆனந்த் சர்மா, முன்னாள் முதல்வர் புபேந்தர் சிங் ஹூடா, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிரிதிவிராஜ் சவான், எம்பி.க்கள் மணீஷ் திவாரி, விவேக் தன்ங்கா மற்றும் சசிதரூர் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். முன்னாள் மத்தியப்பிரதேச முதல்வர் கமல்நாத், மற்றும் மூத்த தலைவர் ப.சிதம்பரம் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். நான்கு மணி நேரம் நடந்த கூட்டத்துக்கு பின் கட்சியின் மூத்த தலைவர் பவன் குமார் பன்சால் கூறுகையில், “கட்சியை வலுப்படுத்துவதை மையமாக கொண்டு கூட்டத்தில் விவாதங்கள் நடந்தது. கட்சியின் தலைவர் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான செயல்முறைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு உள்ளது. நாம் அனைவரும் மிகப்பெரிய குடும்பம். அனைவரும் கட்சியை வலுப்படுத்துவதற்கு முயற்சிக்க வேண்டும் என சோனியா காந்தி கேட்டுக் கொண்டார். ராகுலும் கட்சியை பலப்படுத்துவது குறித்து பேசினார்.

காங்கிரசில் அதிருப்தியோ, கருத்து வேறுபாடுகளோ இல்லை. கட்சியை ஊக்கப்படுத்தும் வகையில், அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றுவதற்கு உறுதி பூண்டுள்ளோம்,” என்றார். இதே போல், மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் பிருத்விராஜ் சவான் கூறுகையில், “கட்சியை வழிநடத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கும் முதல் கூட்டம் இதுவாகும். இனி வரும் நாட்களிலும் இதுபோன்ற கூட்டங்கள் நடத்தப்படும். சிம்லா, பஞ்சமாரியில் காங்கிரஸ் எதிர்கட்சியாக இருந்தபோது நடத்தப்பட்டதை போன்று, சிந்தனை ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்படும்,” என்றார்.

தலைவர் பொறுப்பேற்க ராகுல் தயார்?
இந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான தலைவர்கள், கட்சிக்கு பலம் சேர்ப்பதற்காக ராகுல் மீண்டும் தலைமை பொறுப்பை ஏற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது. கூட்டத்தில் பேசிய ராகுல், ‘கட்சியின் விருப்பத்துக்கு ஏற்ப செயல்பட தயாராக இருக்கிறேன்,’ என கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.



Tags : party structures ,Sonia ,Congress , Problem in party organizations Sonia's suggestion to strengthen Congress: Discussion on dissatisfaction letter
× RELATED காங்கிரஸின் கரம் என்றும் உங்களுடன் உள்ளது: சோனியா காந்தி வீடியோ பதிவு