×

தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லைகள் மூடல்-கலெக்டர் தகவல்

ஊட்டி : தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட உள்ள நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லைகள் மூடப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார். இது குறித்து மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறியிருப்பதாவது,தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இன்று (10ம் தேதி) காலை 4 மணி முதல் 24ம் தேதி காலை 4 மணி வரை இரு வார முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது.இந்த ஊரடங்கின் போது அத்தியாவசிய அரசு துறைகளான மருத்துவத்துறை, வருவாய், காவல், உள்ளாட்சி, தீயணைப்பு, சிறை, மாவட்ட தொழில் மையங்கள், மின்சாரம், குடிநீர் வழங்கல், வனத்துறை, கருவூலத்துைற, சமூக நலன் உள்ளிட்ட துறைகளை தவிர பிற அரசு அலுவலகங்கள் ஏதும் இயங்காது. மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் மூடப்படுகின்றன. உணவகங்களில் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். உள் அரங்கங்கள் மற்றும் திறந்தவெளியில் சமுதாயம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, கல்வி, கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர விழாக்களுக்கு தடை விதிக்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் அழகு நிலையங்கள் மற்றும் சலூன்கள் இயங்க தடை விதிக்கப்படுகிறது. அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் வழிபாட்டிற்கு அனுமதியில்லை. நீலகிரி மாவட்டத்தில் கேரளா, கர்நாடகா மாநில எல்லையோர பகுதிகள் முழுமையாக மூடப்படுகின்றன. சுற்றுலா பயணிகளுக்கு அனுமதியில்லை. இறப்பு மற்றும் மருத்துவ காரணங்களுக்காக வருபவர்கள் உரிய ஆவணங்களுடன் இ-பதிவு பெற்ற பின்னரே வர வேண்டும். அவ்வாறு வந்தாலும் சோதனை சாவடிகளில் முழு விசாரணை மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பின்னரே அனுமதிக்கப்படுவார்கள்.அனைத்து அரசு மற்றும் தனியார் பஸ் சேவை, வாடகை டாக்ஸி, ஆட்டோக்கள் மற்றும் இதர தனியார் பயண வாகனங்கள் ஆகியவை இயங்க தடை விதிக்கப்படுகிறது. இருப்பினும், திருமணம், இறப்பு, வேலைவாய்ப்பு, மருத்துவம் ஆகிய காரணங்களுக்கு உரிய ஆவணங்களுடன் பயணிக்க அனுமதிக்கப்படுவார்கள். பொது இடங்களில் முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபி–்டிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு அல்லது கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்வது போன்றவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும். தொற்று பாதிப்பு இருப்பது தெரிந்தவுடன் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். இவ்வாறு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்துள்ளார்….

The post தமிழகத்தில் இன்று முதல் முழு ஊரடங்கு அமல் நீலகிரி மாவட்டத்தில் கேரள, கர்நாடக எல்லைகள் மூடல்-கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : AMAL ,NEELGIRI DISTRICT ,KERALA ,KARNATAKA ,SARAKH ,Kerala, Karnataka ,Nilgiri district ,Tamil Nadu ,Tamil Nelgiri District ,
× RELATED தேனியில் இருந்து சீருடை அணிந்து...