பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நிறைவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நிறைவடைந்துள்ளது. பொள்ளாச்சி தாலுகாவிற்குட்பட்ட வடக்கு, தெற்கு மற்றும் ஆனைமலை தாலுகாவில் ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட  பகுதிகளில், இலவச கட்டாய உரிமை சட்டப்படி அனைத்து குழந்தைகளையும்பள்ளியில் சேர்த்து, கல்வி  கற்பிக்கும் வகையில் ஏப்ரல், ம் மே மாத விடுமுறை நாட்களில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம்.

 

ஆனால், இந்த ஆண்டில் கொரோனா ஊரடங்கால் கடந்த மார்ச் மாதம் முதல்  பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி தாமதமானது. பல மாதத்திற்கு பிறகு கொரோனா ஊரடங்கு பெருமளவு தளர்வால், அரசின் பல்வேறு  விதிமுறைக்குட்பட்டு நகர் மற்றும் கிராம பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி நடத்த முடிவு செய்யப்பட்டன.  6 வயது முதல் 15 வயது வரையிலான பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட 5 முதல் 18வயது வரையுள்ள குழந்தைகளையும் வீடு, வீடாக சென்று கணக்கெடுத்து, அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு  பிறபிக்கப்பட்டது.

இதையடுத்து, கடந்த நவம்பர் மாதம் 23ம் தேதி முதல், பொள்ளாச்சி கோட்டத்தில் நகர் மற்றும் வடக்கு, தெற்கு, ஆனைமலை  ஒன்றிய கிராமங்களில் உள்ள குடியிருப்பு பகுதிகளில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட  குழந்தைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது. இப்பணியில்  ஆசிரிய பயிற்றுனர்கள், பள்ளி ஆசிரியர்கள், அங்கன்வாடி, பணியாளர்கள், சுயஉதவிக்குழுக்கள், கல்வி குழு உறுப்பினர்கள் என தனித்தனி  குழுவினராக  வீடு, வீடாக சென்று கணக்கெடுத்தனர். விடுமுறை நாட்களை தவிர  வேலை நாட்களில் அப்பணி மேற்கொள்ளப்பட்டது. இப்பணி நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது.

இதில், ஆனைமலை வட்டாரத்திற்குட்பட்ட கிராமங்களில் பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள்  105பேரும், தெற்கு வட்டாரத்தில் 45பேரும், வடக்கு வட்டாரத்தில் 65பேரும் என மொத்தம் 215பேர் இருப்பது என தெரியவந்தது.

கொரோனா ஊரடங்கு தளர்வு முழுமையடைந்து பள்ளிகள் திறப்பு இருந்தவுடன்,  பள்ளி செல்லா குழந்தைகளை அந்தந்த பகுதி, இணைப்பு பள்ளியில் இணைத்து கல்வி கற்றுக்கொடுக்கப்படும், என கல்வி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Related Stories:

>