×

பழநி வனப்பகுதியை கலக்கும் ஒற்றையானை: விவசாயிகள் பீதி

பழநி: பழநி வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை யானையால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர். பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் உள்ளது. இம்மலைப்பகுதியின் அடிவாரத்தில் உள்ள கிராமங்களான ஆண்டிப்பட்டி, பாப்பம்பட்டி, காவலப்பட்டி, பொந்துப்புளி, பாலாறுஅணை,  பொன்னிமலைக்கரடு, தேக்கந்தோட்டம், சட்டப்பாறை, கோம்பைப்பட்டி, சத்திரப்பட்டி ஆகிய கிராமங்கள் உள்ளன.  இப்பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் புகுந்து விடும் காட்டு யானைகள் அங்கு விளைவிக்கப்பட்டிருக்கும் மா, தென்னை, வாழை, கொய்யா, மக்காச்சோளம், கரும்பு மற்றும் நிலக்கடலை உள்ளிட்ட பயிர் வகைகளை நாசம் செய்தும்,  அப்பகுதியில் உள்ள வீடுகளை இடித்து தள்ளியும் அட்டகாசம் செய்து வருகின்றன. இதுவரை யானை தாக்கி பழநி மற்றும் ஒட்டன்சத்திரம் வனப்பகுதிகளில் 15க்கும் மேற்பட்ட மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

 இந்த யானைகளை விரட்ட  வனத்துறையினர் பட்டாசு வெடித்தல், அதிக ஒளிச்செறிவு கொண்ட விளக்குகளைப் பயன்படுத்துதல், அகழி அமைத்தல், சோலார் மின் வேலி அமைத்தல், அகழி அமைத்தல், கும்கி யானைகளை பயன்படுத்துதல் என பல்வேறு முயற்சிகளில்  ஈடுபட்டனர். எனினும் பயன் ஏதுமில்லை. சோலார் மின் வேலி சரியான பராமரிப்பு இல்லாத காரணத்தினால் அடிக்கடி பழுதடைந்து விடுகிறது.

 இந்நிலையில் கடந்த சில தினங்களாக பழநி வனச்சரகத்திற்குட்பட்ட மலையோர கிராமங்களில்  ஒற்றை ஆண் யானை சுற்றி திரிந்து வருவதாக தெரிகிறது. இந்த யானை அப்பகுதி விவசாயிகளை விரட்டி அடித்தும், தென்னை, மா உள்ளிட்ட பயிர்களை நாசம் செய்வதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த யானையை விவசாயிகள்  வெடி வெடித்து யானையை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டும் எவ்வித உபயோகமும் இல்லை.     ஆனால், யானை எவ்வித அசைவும் கொடுக்காமல் அதே பகுதியிலேயே சுற்றித் திரிந்து வருகிறது. மனிதர்களை தாக்க முற்படும் இந்த ஒற்றை  யானையால் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் கடும் பீதி அடைந்துள்ளனர்.


Tags : forest ,Palani , Single elephant mixing Palani forest: Farmers panic
× RELATED இரவு நேரங்களில் அணை பகுதியில் தங்க...