×

ஊட்டி மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி துவக்கம்

ஊட்டி: ஆண்டுதோறும் கோடை காலத்தில் குளு குளு சீசனை அனுபவிக்க ஊட்டிக்கு பல்லாயிரகணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். ஊட்டிக்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விப்பதற்காக கோடை காலத்தில்  பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. இதில், மலர் கண்காட்சியும் ஒன்று. இதை காண வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால், ஆண்டுதோறும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சியின்போது தோட்டக்கலைத்துறையினர் சுற்றுலா பயணிகளை கவர பூங்காவில் 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் வண்ண, வண்ண மலர்கள் பூக்கும் மலர் செடிகளை வைத்து அலங்காரமாக வைப்பது வழக்கம்.

இந்த மலர் தொட்டிகளில் மேரிகோல்டு, ஆப்பிரிக்கன் மேரிகோல்டு, பேன்சி, பெட்டூனியம், பால்சம், சைக்ளோமென், டேலியா மற்றும் சால்வியா போன்ற மலர் செடிகள் அதிகளவு இருக்கும். பெரும்பாலான மலர் செடிகள் ஐந்து மாதங்களுக்கு  பின் பூக்கக்கூடியவை. 2021 மலர் கண்காட்சிக்காக பூங்கா முழுவதிலும் பல்வேறு வகையான மலர் நாற்றுக்களை நடவு செய்யும் பணிகள் ஓரிரு நாட்களில் துவக்க பூங்கா நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதே நாளில், 35 ஆயிரம் மலர்  தொட்டிகளிலும் நாற்று நடவு பணிகள் துவக்கப்பட உள்ளது.

இதனால், 35 ஆயிரம் மலர் தொட்டிகளில் மண் நிரப்பும் பணி தற்போது துவக்கப்பட்டுள்ளது. இந்த 35 ஆயிரம் மலர் தொட்டிகளிலும் நாற்று நடவு பணிகள் நிறைவடைந்து வரும் ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் மலர்கள் பூத்துக் குலுங்கும். தொட்டிகள் பூங்காவில் உள்ள அலங்கார மேடையில் சுற்றுலா பயணிகள் பார்வைக்காக மே மாதம் முழுவதும் வைக்கப்படும்.தற்போது, பூங்கா முழுவதும் உள்ள பாத்திகளில் நாற்று நடவு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் பூங்காவில் கண்ணாடி மாளிகை போன்று ஒரு சில இடங்களில் மட்டுமே மலர் செடிகள் உள்ளன. இவற்றிலும், குறைந்தளவே மலர்கள் காணப்படுகின்றன.

இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அழகிய வண்ண வண்ண மலர்களை காண முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர். மேலும், தமிழகம் மாளிகை பூங்காவிலும் நாற்று நடவு பணிகளுக்கான ஆயுத்த பணிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறையை கொண்டாட ஏராளமான சுற்றுலா பயணிகள் ஊட்டி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இவர்கள், ரோஜா பூங்காவில் உள்ள ஒரு சில ரோஜா மலர்களை  மட்டுமே கண்டு ரசிக்க முடியும்.

Tags : Commencement ,Ooty Flower Exhibition , Commencement of soil filling work in 35 thousand pots for Ooty Flower Exhibition
× RELATED சபரிமலை சீசன் தொடக்கம்...