×

கொரோனா பரவலால் மூடப்பட்ட ஊட்டி திபெத் மார்க்கெட் மீண்டும் திறப்பு

ஊட்டி: கொரோனா பரவலால் மூடப்பட்ட ஊட்டி திபெத் மார்க்கெட் எட்டு மாதங்களுக்கு பின் மீண்டும்  திறக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் ஊட்டியில் திபெத் அகதிகள் பலர் வசித்து வருகின்றனர். இவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகின்றனர். இவர்கள், தங்களின் வாழ்வாதாரத்திற்காக ஸ்வெட்டர், சால்வை, ஜெர்கின் போன்ற வெம்மை ஆடைகளை தலை சுமையாக எடுத்துச் சென்று கிராமப்புறங்களில் விற்பனை செய்து வந்தனர். மேலும், ஊட்டியில் உள்ள தாவரவியல் பூங்கா செல்லும் நடைபாதை, படகு இல்லம் செல்லும் நடைபாதை, தொட்டபெட்டா உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் நடைபாதைகளில் இந்த இந்த வெம்மை ஆடைகளை விற்பனை செய்து வந்தனர்.

இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இவர்களுக்கு ஊட்டி தாவரவியல் பூங்கா நுழைவுவாயில் பகுதியில் உள்ள பிரிக்ஸ் பள்ளி பார்க்கிங் தளத்தில் கடைகள் கட்டிக் கொடுக்கப்பட்டன. அன்று முதல் இவர்கள் தலை சுமையாக வெம்மை ஆடைகளை வெளியில் கொண்டுச் சென்று விற்பனை செய்வதை நிறுத்திவிட்டு இந்த கடைகளில் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். தற்போது இவர்களின் வியாபாரம் சுற்றுலா பயணிகளை மட்டுமே நம்பி உள்ளது.

இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், சுற்றுலா தலங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இவர்களும் தங்களது கடைகளை மூடினர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்ட போதிலும், சுற்றுலா பயணிகள் வருவதற்கு தொடர்ந்து பல்வேறு கட்டுப்பாடுகள் இருந்து வந்தன. இதனால், கடந்த 8 மாதங்களாக திபெத் மார்க்கெட் மட்டும் திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. கடந்த மாதம் முதலே சுற்றுலா பயணிகள் வருவதில் தளர்வுகள் அளிக்கப்பட்டு, தற்போது ஊட்டிக்கு வழக்கம் போல் சுற்றுலா பயணிகள் வரத் துவங்கி உள்ளனர்.

இதனால், 8 மாதங்களுக்கு பின் தற்போது ஊட்டியில் உள்ள திபெத் மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. இருப்பினும், முழுமையாக திறக்கப்படாமல், ஒரு சில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன.



Tags : Tibetan ,corona spread , Ooty Tibetan market reopens after being closed by corona spread
× RELATED பல்வேறு துறைகளில் பணிபுரிய 138 பேருக்கு பணி நியமன ஆணை