×

போளூர் தாலுகாவில் தரமற்ற பணிகள் ரூ.3.40 கோடியில் போடப்பட்டு 10 மாதத்தில் சிதிலமடைந்த சாலை: குண்டும், குழியுமானதால் மக்கள் அவதி

போளூர்: போளூர் தாலுகாவில் ரூ.3.40 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட கிராமப்புற சாலை 10 மாதத்தில் குண்டும், குழியுமாக மாறியுள்ளது.போளூர் தாலுகா சேத்துப்பட்டு ஒன்றியம் ஓகூர் முதல் அரியத்தூர் வரை 9 கி.மீ. தூரத்திற்கு ஊரக வளர்ச்சித்துறைக்கு சொந்தமான சாலை அமைந்துள்ளது. இந்த சாலை சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு தார் சாலையாக இருந்தது. அதன்  பிறகு சாலை சேதமடைந்து மண் சாலையாக மாறியது. நிதி இல்லாத காரணத்தால் புதிய சாலை அமைக்க முடியாமல் இருந்தது. இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் கிராம மக்கள் அவதிப்பட்டு வந்தனர்.

 குறிப்பாக, நெல் மூட்டைகளை தலைச்சுமையாக பல கிலோ மீட்டர் சுமந்து செல்லும் நிலைக்கு ஆளாகினர். எனவே, புதிய சாலையாக அமைத்து தர  வேண்டுமென 10 ஆண்டுகளாக போராடி வந்தனர். இந்நிலையில், கடந்த 2017-2018ம் ஆண்டு பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில், சாலை அமைக்க ₹3.40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதற்கான டெண்டர் விட்டும் 3 ஆண்டுகளாக பணிகள் முறையாக நடக்காமல் கிடப்பில்  இருந்தது. சிறுபாலங்கள் கட்டுவதற்காக தோண்டப்பட்ட பள்ளங்களும் அப்படியே நின்றுபோனது. இதனால் 3 ஆண்டுகளாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து, சாலை அமைக்க வலியுறுத்தி ஓகூர், கரிக்காத்தூர், வம்பலூர், அரியத்தூர் உள்ளிட்ட கிராம மக்கள், கடந்த ஜனவரி மாதம் வடமாதிமங்கலம் கூட்ரோடில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பிறகு சாலை அமைக்கும்  பணியை தொடங்கி, கொரோனா ஊரடங்கு அறிவித்த சமயத்தில் பணிகள் முடிக்கப்பட்டது. இந்நிலையில், சாலை அமைத்த சில மாதங்களிலேயே பல இடங்களில் சாலைகள் பாலம், பாலமாக வெடித்தது. பல இடங்களில் குண்டும், குழியுமாக மாறி மழைநீர் தேங்கியது. குறிப்பாக, கீழ்கரிக்காத்தூர் கிராமத்தில் இருந்து அரியத்தூர் வரை 5  கி.மீ. தூரத்திற்கு சாலை மிகவும் பள்ளங்களாக மாறியுள்ளது. சாலை அமைத்த நிறுவனம் அதனை முறையாக பராமரிக்காததால் மேலும் மோசமானது.

இதுகுறித்து வம்பலூர், அரியத்தூர் கிராம மக்கள் கூறுகையில், `சாலை அமைத்த சில மாதங்களிலேயே குண்டும், குழியுமாக மாறிவிட்டது. தரமற்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டதே இதற்கு காரணம். இதுகுறித்து அதிகாரிகளுக்கு புகார்  தெரிவித்தோம். அதன்பேரில் சாலை அமைத்த ஒப்பந்ததாரர் ஒரு சில இடங்களில் சிமென்ட் கலவையை பூசிவிட்டு சென்றார். அதுவும் 6 மாதத்தில் சேதமடைந்துவிட்டது. பல்வேறு இடங்களில் பள்ளமாக இருப்பதால் நாங்களே முரம்பு மண்ணை  கொட்டி சரி செய்துள்ளோம். எப்படியும் அடுத்த ஆண்டுக்குள் மீண்டும் மண் சாலையாக மாறிவிடும். சாலை அமைக்கப்பட்டது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் யாரும் நேரில் ஆய்வு செய்யவில்லை’ என்றனர்.

Tags : taluka ,Polur ,Rs , 3.40 crore substandard road in Polur taluka and ruined in 10 months
× RELATED வேதை அருகே பாஜ அலுவலகம் திறப்பு:...