கேரள உள்ளாட்சித் தேர்தல்: ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வியடைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர்...அதிர்ச்சியடைந்த பினராயி விஜயன்.!!!

திருவனந்தபுரம்: கேரளாவில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர், ஒரு ஓட்டு கூட பெறாதது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் உள்ளாட்சி  அமைப்புகளுக்கான தேர்தல் 3 கட்டமாக கடந்த வாரம் நடந்தது. இதில் பதிவான வாக்குகள் கடந்த 16-ம் தேதி எண்ணப்பட்டன. இதன் முடிவில், ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அமொக வெற்றி பெற்றது. இருப்பினும், மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒருவர் ஒரு வாக்கு கூட பெறாமால் தோல்வியடைந்துள்ளார்.

கோழிக்கோடு மாவட்டம் கொடுவள்ளியை சேர்ந்த காரட் ஃபைசல் என்பவர் கேரளாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள தங்கக் கடத்தல் வழக்கில் சிக்கியதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அனுமதி  அளிக்கவில்லை. மேலும், காரட் ஃபைசல் பதிலாக வேறொரு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளரை அந்த வார்டில் நிறுத்தியது. இதனால், ஆத்திரம் அடைந்த காரட் ஃபைசல் கொடுவள்ளியில் உள்ள 15-ம் வார்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  வேட்பாளரை எதிர்த்து சுயேச்சையாக போட்டியிட்டார்.

ஆனால், தேர்தல் முடிவு காரட் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்ட காரட் ஃபைசல் அமொக வெற்றி பெற்றார். இதில், வேதனையான விஷயம் என்னவென்றால்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் ஒரு வாக்கு கூட பெறாமல் தோல்வி அடைந்தார். இதற்கிடையே, வேட்பாளர் வீட்டில் ஐந்து ஓட்டுகள் இருந்துள்ளது. வேட்பாளர் ஓட்டும் மாற்று கட்சிக்கு பதிவானது கட்சி தலைமையை அதிர்ச்சி அடைய  வைத்திருக்கிறது. சுயேச்சையாக நின்றாலும் காரட் ஃபைசலுக்கு மார்க்சிஸ்ட் தொண்டர்கள் மறைமுகமாக ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டதாகவும், அதன்படியே அவர் வெற்றி பெற்றதாகவும் புகார் எழுந்துள்ளது. இதைத் தொடர்ந்து, தோல்வி  குறித்து தனது வேட்பாளரிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் விசாரணை நடத்தி வருகிறது.

கேரள உள்ளாட்சி தேர்தல்:

கேரளாவில் மொத்தமுள்ள 6 மாநகராட்சிகளில் திருவனந்தபுரம், கொல்லம், கொச்சி, திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகியவற்றை இடது முன்னணியும், கண்ணூர் மாநகராட்சியை காங்கிரஸ் கூட்டணியும் வென்றுள்ளன. மொத்தமுள்ள 86  நகராட்சிகளில் காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், இடது முன்னணி 35 இடங்களிலும், பாஜ 2 இடங்களிலும், மற்றவர்கள் 4 இடங்களிலும் வெற்றி பெற்றனர்.

14 மாவட்ட பஞ்சாயத்துகளில் 11 இடங்களில் இடது முன்னணியும் 3 இடங்களில் காங்கிரஸ் கூட்டணியும் வென்றன. 152 ஊராட்சி ஒன்றியங்களில் 108 இடங்களில் இடது முன்னணியும், 44 இடங்களில் காங்கிரசும் வென்றன. 941 கிராம  பஞ்சாயத்துகளில் 514 இடங்களை இடது முன்னணியும், 376 இடங்களை காங்கிரஸ் கூட்டணியும், 23 இடங்களை பாஜ.வும், 28 இடங்களை பிற கட்சியினரும் பிடித்துள்ளனர்.

Related Stories:

>