×

நடத்தையில் சந்தேகத்தால் விபரீதம் மாநகராட்சி ஊழியர் கழுத்தறுத்து கொலை: கணவன் கத்தியுடன் போலீசில் சரண்

துரைப்பாக்கம்: நடத்தையில் சந்தேகம் காரணமாக மாநகராட்சி பெண் ஊழியரை கழுத்தறுத்து கொன்ற கணவன், கத்தியுடன் போலீசில் சரணடைந்த சம்பவம் நீலாங்கரை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. சின்ன நீலாங்கரை மேட்டு காலனியை சேர்ந்தவர் ஹரி (35), எலக்ட்ரீஷியன். இவரது மனைவி கோமதி (35). இருவரும் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு  ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். கோமதி, சென்னை மாநகராட்சி தலைமை அலுவலகத்தில் தற்காலிக பணியாளராக பணியாற்றி வந்தார். சமீப காலமாக மனைவியின் நடத்தையில் ஹரிக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. ஹரி மது அருந்திவிட்டு கோமதியை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இந்நிலையில்,  நேற்று மதியம் கோமதி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது குடித்துவிட்டு வந்த ஹரி, வழக்கம்போல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

ஆனாலும் ஆத்திரம் தீராத ஹரி, வீட்டில் இருந்த கத்தியை எடுத்து மனைவியின் கழுத்தை அறுத்துள்ளார். இதில், படுகாயமடைந்த கோமதி, ரத்தவெள்ளத்தில் கீழே சரிந்தார். சிறிது நேரத்தில் துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து,  கத்தியுடன்  நீலாங்கரை காவல் நிலையத்தில் ஹரி சரணடைந்தார். போலீசார், சம்பவ இடத்திற்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிந்து, ஹரியை கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல்  சிறையில் அடைத்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.



Tags : Corporation , Suspicion of misconduct Corporation employee beheaded: Husband surrenders to police with knife
× RELATED சரலூர் ஆற்றங்கரை சாலையில் மழைநீர் வடிகால் இணைக்கப்படுமா?