×

கமல்-முதல்வர் எடப்பாடி மோதல் எதிரொலி: தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வெளியிட திட்டம்: சூடுபிடிக்க தொடங்கியது அரசியல்களம்

சென்னை: தமிழகத்தில் 2021 ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ளன. இந்நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின்  தலைவருமான கமல்ஹாசன் தமிழகம் முழுவதும் பிரசாரத்தை தொடங்கியுள்ளார். அவர் பிரசாரம் செய்யும் இடங்களில், ‘‘நான் எம்ஜிஆர் மடியில் உட்கார்ந்திருக்கிறேன். அவருடன் தொலைபேசியில் பேசி உள்ளேன். எம்ஜிஆர் ஏழை  மக்களுக்காக ஆட்சி நடத்தினார். தற்போதுள்ள அதிமுக தலைவர்கள் ஊழல் செய்வதற்காகவே திட்டங்களை அறிவிக்கிறார்கள். தமிழக அதிகாரிகள் வீடுகளுக்கு லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் சோதனையிட செல்லும்போது தோல்வியோடு  திரும்பவில்லை. பெரும்பாலான அதிகாரிகள் திருடித்தான் வைத்திருக்கிறார்கள். அரசு எவ்வழியோ, அதிகாரிகளும் அவ்வழி’’ என்று பேசி வருகிறார். கமல்ஹாசனின் இந்த பிரசாரம் அதிமுக தலைவர்களை எரிச்சல் அடைய வைத்துள்ளது.

அவருக்கு பதிலடி அளிக்கும் வகையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் கமலை கடுமையாக தாக்கி பேசினார்.  அப்போது பேசிய முதல்வர் எடப்பாடி, ‘‘கமல் புதிதாக கட்சியை தொடங்கியுள்ளார். சினிமாவில் ரிடையர்டு ஆகி அரசியலுக்கு வந்துள்ளார். 70 வயதில் டிவி நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறார். அந்த நிகழ்ச்சியை பார்த்தால் ஊரிலுள்ள ஒரு  குடும்பம்கூட நன்றாக இருக்காது. ஒரு படத்திலாவது நல்ல பாடல் பாடியிருக்கிறாரா? நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை. அந்த டிவி தொடரை பார்த்தால் நன்றாக இருக்கும் குடும்பமும் கெட்டுவிடும். அவர்  சொல்லும் கருத்துகளை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை’’ என்றார். முதல்வர் எடப்பாடியை தொடர்ந்து அமைச்சர்கள் ஜெயக்குமார், செல்லூர் ராஜு, கடம்பூர் ராஜு மற்றும் வைகைச்செல்வன் உள்ளிட்ட அதிமுகவின் முன்னணி தலைவர்கள் கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்து வருகிறார்கள். அப்படி கருத்து  சொல்லும்போது, நடிகர் கமல்ஹாசனை மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் பேசி வருகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகளால் கமல்ஹாசன் தரப்பினரும் எரிச்சல் அடைந்துள்ளனர்.

தற்போது கமல்ஹாசன் கட்சியில் சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தற்போதைய ஆளுங்கட்சியில் பணியாற்றியவர்கள். அதனால், அமைச்சர்களின் ஊழல் குறித்த அனைத்து தகவல்களும் அவர்களுக்கு  தெரியும். கமல்ஹாசனும், அமைச்சர்களின் ஊழல் பட்டியல்களை தயார் செய்யும்படி தனது கட்சியில் உள்ள ஓய்வு பெற்ற மற்றும் விருப்ப ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அவர்களும் அதிமுக ஆட்சியின் ஊழல்  பட்டியல்களை தயாரிக்க தொடங்கி உள்ளனர். இன்னும் சில நாட்களில் தமிழக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை தினசரி வெளியிட மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் முடிவு செய்துள்ளார். இதன்மூலம் பல அமைச்சர்களின் ஊழல்கள் ஆதாரத்துடன் விரைவில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

தற்போது கமல்ஹாசன் கட்சியில் சில ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் தற்போதைய ஆளுங்கட்சியில் பணியாற்றியவர்கள். அதனால், அமைச்சர்களின் ஊழல் குறித்த அனைத்து தகவல்களும் அவர்களுக்கு  தெரியும்

Tags : Echo ,Kamal-Chief ,Edappadi ,arena ,Tamil Nadu ,ministers , Assembly elections are scheduled to be held in Tamil Nadu in April or May 2021. There are only 4 months left until the election.
× RELATED கச்சா எண்ணெய் விலை குறைந்தும்...