×

விற்பவர்கள் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பேக்கிங் செய்யாமல் சில்லறையில் சமையல் எண்ணெய் விற்பனைக்கு தடை: ஐகோர்ட் கிளை அதிரடி

மதுரை: பேக்கிங் செய்யாமல் சில்லரையில் சமையல் எண்ணெய் விற்பனைக்கு இடைக்காலத் தடை விதித்துள்ள ஐகோர்ட் கிளை, தயாரிப்போர், விற்போர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுப்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க  வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.  மதுரை மாவட்டம், மேலூரை சேர்ந்த வக்கீல் அருண்நிதி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முந்திரி தோலில் தயாரித்த எசன்ஸ் வகையைச் சேர்ந்த எண்ணெயை சமையல் எண்ணெயில் கலப்படம் செய்கின்றனர். இது  ஆய்வக பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. கலப்படத்தால் கல்லீரல் பாதிப்பு, புற்றுநோய் உட்பட பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. சட்டப்படி எண்ணெயை உதிரியாக விற்பனை செய்யக்கூடாது. பேக்கிங் செய்து விற்பனை செய்ய  வேண்டும். கலப்பட எண்ணெய் விற்பனை செய்வதை எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது என சுகாதாரத்துறை, உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட வேண்டும். தரமான சமையல் எண்ணெய் விற்பனை செய்வதை உறுதி செய்ய வேண்டும்.  மீறுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர். மூத்த வக்கீல் வீரா கதிரவன் ஆஜராகி, ‘‘பேக்கிங் இல்லாமல் சில்லரையில் விற்கப்படும் சமையல் எண்ணெயின் தரத்தை பொதுமக்களால் உறுதி செய்ய  முடியாது. இந்த வகை கலப்பட எண்ணெயை விலை குறைவு என விற்கின்றனர். நிறமற்ற, வாசனையற்ற ஒரு வகை எண்ணெயை, கடலை எண்ணெயில் கலக்கின்றனர். 25 மில்லி கிராம் முந்திரி எசன்சை 15 லிட்டர் வரையிலான கடலை  எண்ணெய்யில் கலப்படம் செய்ய முடியும். உணவு பாதுகாப்பு சட்டப்படி டின் மற்றும் பாக்கெட்களில் அடைத்து தான் விற்க வேண்டும்’’ என்றார். அரசு வக்கீல் பத்மாவதிதேவி ஆஜராகி, ‘‘கடந்த 3 மாதங்களில் 230 மாதிரிகள் சேகரிக்கப்பட்டதில் 164 பரிசோதனை முடிவுகள் கிடைத்தது. இதில், 51 மாதிரிகள் சமைப்பதற்கு தகுதியற்றது என்றும், 88 மாதிரிகள் கலப்படம் உள்ளது என்றும், 55  மட்டுமே நிர்ணயிக்கப்பட்ட தரத்தில் உள்ளதும் தெரிய வந்துள்ளது’’ என்றார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘‘பேக்கிங் செய்யப்படாத சமையல் எண்ணெய் விற்பனைக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. தரமற்றதும், கலப்பட எண்ணெய் தயாரிப்பவர்கள், விற்பவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது நடவடிக்கை எடுக்க  ஏன் சட்டத்திருத்தம் செய்யக் கூடாது. எண்ணெய் விற்பனையில் நடந்த முறைகேடுகள் தொடர்பாக கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட வாரியாக எத்தனை வழக்குகள் பதியப்பட்டன. அதன்மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது. எண்ணெயின்  தரத்தை ஆய்வு செய்ய மாவட்டந்தோறும் அரசு மற்றும் தனியார் ஆய்வங்கள் எத்தனை உள்ளன. மற்ற மாநிலங்களில் எத்தனை ஆய்வகங்கள் உள்ளன என்பதற்கு அரசுத் தரப்பில்  பதிலளிக்க வேண்டும்’’ என உத்தரவிட்டு, விசாரணையை  ஜன. 18க்கு தள்ளி வைத்தனர்.

Tags : sellers , Legal action without packing on the spanking of sellers in the sale of edible oil ban: HC Branch Action
× RELATED ஜெயங்கொண்டம் அருகே மது விற்ற இருவர் கைது