மேற்கு வங்கத்தில் பாஜ அசுர வேட்டை சிதறுகிறது திரிணாமுல் காங்கிரஸ்: 3வது அதிருப்தி எம்எல்ஏ ராஜினாமா

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சட்டப்பேரவை தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில், பாஜ.வின் அசுரத்தனமான அரசியல் வேட்டை ஆரம்பித்துள்ளது. அமித்ஷா நேற்று இம்மாநிலத்துக்கு சென்ற நிலையில், திரிணாமுல்லில் இருந்து  3வது எம்எல்ஏ ராஜினாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தில் அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தலில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜ தீவிரம் காட்டி வருகிறது. முதல் கட்டமாக, முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான ஆளும் திரிணாமுல் காங்கிரசை பலவீனப்படுத்தும்  முயற்சியில் இறங்கியுள்ளது. இதன் காரணமாக, பாஜ விரித்த வலையில் சிக்கி, திரிணாமுல் அதிருப்தி எம்எல்ஏக்கள் ஒவ்வொருவராக  விலக தொடங்கி உள்ளனர்.  திரிணாமுல் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய முகுல் ராய் சில மாதங்களுக்கு முன் கட்சியில் இருந்து விலகி, பாஜ.வில் இணைந்தார். தற்போது அவர், அக்கட்சியின் தேசிய துணைத் தலைவராக இருக்கிறார். சில வாரங்களுக்கு  முன், மம்தாவின் அரசில் அமைச்சராக இருந்த சுவேந்து அதிகாரி, பதவியை ராஜினாமா செய்தார். இந்த வார தொடக்கத்தில் எம்எல்ஏ பதவியையும், நேற்று முன்தினம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியையும் அவர் ராஜினாமா செய்தார்.

இதைத் தொடர்ந்து,  அசன்சால் மாநகராட்சி குழு தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக எம்எல்ஏ ஜிதேந்திர திவாரி நேற்று முன்தினம் அறிவித்தார். இதேபோல், தெற்கு வங்க மாநில போக்குவரத்துகழக தலைவர் திப்தன்க்சு சவுத்ரி  ராஜினாமா செய்கிறார். இந்நிலையில், 2 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று இரவு மேற்கு வங்கம் சென்ற நிலையில், திரிணாமுல் காங்கிரசை சேர்ந்த பராக்பூர் தொகுதி எம்எல்ஏ சில்பத்ரா தத்தா கட்சியின் முக்கிய  பொறுப்பில் இருந்து விலகுவதாக  நேற்று ராஜினாமா கடிதம் கொடுத்தார். அவரை தொடர்ந்து, திரிணாமுல் காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு பொதுச் செயலாளர் கபிருல் இஸ்லாமும் ராஜினாமா செய்துள்ளார். இதனால், முதல்வர் மம்தா  அதிர்ச்சி அடைந்துள்ளார்.  ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கலகலக்க தொடங்கியுள்ளது. இக்கட்சியை சேர்ந்த மேலும் பல எம்எல்ஏ.க்கள், மூத்த நிர்வாகிகளும் வரிசையாக விலகுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

5 பாஜ தலைவர்கள் மீது  நடவடிக்கை எடுக்க தடை

மேற்கு வங்கத்தை சேர்ந்த பாஜ தலைவர்களான முகுல்ராய், எம்பி.க்கள் கைலாஷ் விஜய்வர்கியா, அர்ஜூன் சிங் உள்ளிட்ட 5 பேர், ‘தங்களின் அரசியல் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடும் வகையில் மாநில அரசால் குற்ற வழக்குகள்  தொடரப்பட்டுள்ளன. இந்த வழக்குகளில் விசாரணை முடியும் வரை, எங்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு மாநில அரசுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்,’ என உச்ச நீதிமன்றத்தில் தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர்.

நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல் அமர்வு நேற்று இந்த வழக்கை விசாரித்து, ‘இது தொடர்பாக மேற்கு வங்க அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். மேலும், அடுத்த விசாரணை வரை 5 பேர் மீதும் நடவடிக்கை எடுக்க இடைக்கால தடை  விதிக்கப்படுகிறது.’ என அறிவித்து, அடுத்த மாதம் 2வது வாரத்துக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.

விலகிய எம்எல்ஏ.க்கள்  அமித்ஷாவுடன் சந்திப்பு?

நேற்று இரவு கொல்கத்தா வந்த அமித்ஷா, 2 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இன்று அவர், தனது மதிய உணவை விவசாயி ஒருவரின் வீட்டில் சாப்பிடுகிறார். திரிணாமுல் கட்சியில் இருந்து விலகிய அதிருப்தி  எம்எல்ஏ.க்கள், அமித்ஷாவை நேரில் சந்திப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுவேந்துக்கு  இசட் பாதுகாப்பு

திரிணாமுல் காங்கிரசில் இருந்து விலகியுள்ள சுவேந்து அதிகாரி, தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஆளுநர் தங்காருக்கு நேற்று முன்தினம் கடிதம் அனுப்பினார். இந்நிலையில், அவருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் இசட் பிரிவு  பாதுகாப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம், மேற்கு வங்கத்தில் அவர் குண்டு துளைக்காத வாகனத்தில் செல்லும் இசட் பிரிவு பாதுகாப்பும், மற்ற மாநிலங்களுக்கு செல்லும்போது ஒய் பிளஸ் பிரிவு பாதுகாப்பும் வழங்கப்பட உள்ளது.

Related Stories:

>