அணுகுண்டு தயாரிக்க மீண்டும் முயற்சியா? ஈரானில் பூமிக்கடியில் ரகசிய அணு நிலையம்: செயற்கைக்கோள் மூலம் அம்பலம்

துபாய்: அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக அமெரிக்காவுடன் பதற்றம் நீடித்து வரும் நிலையில், பூமிக்கடியில் ரகசிய அணு நிலையத்தை ஈரான் நிறுவி வருவது செயற்கைக்கோள் புகைப்படம் மூலமாக அம்பலமாகி உள்ளது. அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, அணுகுண்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஈரான் மீது வல்லரசு நாடுகள் பொருளாதார தடை விதித்தன. அதன் பிறகு, ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்தபோது, அமெரிக்கா,  இங்கிலாந்து, பிரான்ஸ், ரஷ்யா, சீனா ஆகிய நாடுகள் ஈரானுடன் கடந்த 2015ல் அணுசக்தி ஒப்பந்தம் செய்து கொண்டன.  அதன்படி, ஆக்கப்பூர்வ தேவைகளுக்கு யுரேனியம் செறிவூட்ட ஈரானுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும், எவ்வளவு யுரேனியம் இருப்பு வைத்து கொள்ளலாம், எந்தளவு செறிவூட்டலாம் என வரம்பு நிர்ணயிக்கப்பட்டது.

இந்த ஒப்பந்தத்தை மீறி ஈரான் யுரேனியம் செறிவூட்டலில் ஈடுபட்டதால், ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அதிபர் டிரம்ப் 2018ல் அறிவித்தார். இதைத் தொடர்ந்து, ஈரான் மீது மீண்டும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தார். இந்நிலையில், போர்டோ பகுதியில் பூமிக்கடியில் கடந்த செப்டம்பர் முதல் ரகசிய அணு ஆயுத திட்டத்துக்கான கட்டிடங்களை ஈரான் கட்டி வருவது அம்பலமாகி இருக்கிறது. ‘மேக்சார் தொழில்நுட்ப மையம்’ என்ற நிறுவனம், கடந்த 11ம் தேதி  தனது செயற்கைக்கோள் மூலம் எடுத்த புகைப்படங்களின் மூலம் இது தெரியவந்துள்ளது. ஈரானின் யுரேனிய செறிவூட்டல் மையமான தேசிய வெற்றிட தொழில்நுட்ப மையம், போர்டோ அணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அருகே இது  கட்டப்பட்டு வருவதாக செயற்கைக்கோள் புகைப்படத்தினை ஆராய்ந்த அணுசக்தி நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இதனால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குண்டு போட்டாலும் அழியாது

* ஈரான் தலைநகர் டெஹ்ரானில் இருந்து 90 கிமீ தொலைவில் உள்ள குவாம் நகரின் அருகே பூமிக்கடியில் இந்த ரகசிய அணு நிலையம் கட்டப்படுகிறது.

* தற்போது வரையில் 15க்கும் மேற்பட்ட தூண்களுடன் கட்டிடம் எழுப்பப்பட்டுள்ளது.

* போர் விமானங்கள் மூலம் நடத்தப்படும் வான்வழி தாக்குதல், நிலநடுக்கத்தில் இருந்து பாதுகாக்கும் வகையில் மலைகளுக்கு இடையே மிகவும் பாதுகாப்பான முறையில் இது கட்டப்படுகிறது.

Related Stories:

>