×

ஆந்திராவுக்கு லாரியில் மறைத்து அழைத்துச் சென்றனர் செம்மரம் வெட்ட சென்ற தமிழக தொழிலாளிகள் 25 பேர் கைது: ஜவ்வாதுமலையை சேர்ந்தவர்கள்

திருமலை: ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் மறைத்து அழைத்துச் செல்லப்பட்ட தமிழக தொழிலாளிகள் 25 பேரை போலீசார் கைது செய்தனர். ஆந்திராவில் செம்மரம் வெட்டுவதற்காக திருத்தணி வழியாக தொழிலாளர்கள் வருவதாக நேற்று முன்தினம் இரவு திருப்பதி செம்மரக்கடத்தல் தடுப்பு அதிரடிப்படைக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து நள்ளிரவு 12 மணியளவில்  எஸ்பி ஆஞ்சனேயலு உத்தரவின்பேரில், ஆர்எஸ்ஐ வாசு தலைமையிலான போலீசார் சித்தூர் அடுத்த புத்தூர் டோல்கேட் அருகே வாகனச்சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருத்தணி வழியாக புத்தூர் சுங்கச்சாவடிக்கு வந்த ஒரு லாரியை போலீசார் மடக்கி நிறுத்தினர். போலீசாரை கண்டதும் லாரி டிரைவர் உட்பட 7 பேர் லாரியில் இருந்து குதித்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து, லாரியை போலீசார் சுற்றி வளைத்து, அதில் தார்பாயால் மறைத்து அழைத்து வரப்பட்டிருந்த 25 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.  இதில், அவர்கள் அனைவரும் திருவண்ணாமலை மாவட்டம், ஜவ்வாதுமலையை சேர்ந்த தொழிலாளிகள் என்பதும், செம்மரம் வெட்டுவதற்காக லாரியில் வந்தவர்கள் எனவும் தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார்,  தப்பியோடிய 7 பேரை தேடி வருகின்றனர்.

துணியால் கட்டி இறுக்கப்பட்ட கைகள்
செம்மரம் வெட்ட சென்றதாக, கைது செய்யப்பட்ட தமிழக தொழிலாளர்கள் அனைவரின் கைகளையும் அம்மாநில போலீசார் துணியால் இறுக்கமாக கட்டினர். அப்படியே போலீஸ் நிலையத்துக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர். இதனால்   தொழிலாளர்கள் பல மணி நேரம் அவதிப்பட்டனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியானதால், பலர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Tags : Tamil Nadu ,Andhra Pradesh , 25 Tamil Nadu workers arrested for smuggling sheep to Andhra Pradesh: Javadumalai
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...