காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட மோதலுக்கு தீர்வுகாண சோனியா-‘ஜி23’ தலைவர்கள் நாளை சந்திப்பு?: மத்தியஸ்தராக களம் இறங்கினார் கமல்நாத்

புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து மோதலுக்கு தீர்வுகாண நாளை சோனியா காந்தி - ‘ஜி23’ தலைவர்கள்  சந்திப்புக்கான ஏற்பாடுகளை முன்னாள் முதல்வர் கமல்நாத் செய்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா  காந்திக்கு, கடந்த ஆகஸ்ட் கட்சியின் 23 மூத்த தலைவர்கள் (ஜி23) ஒரு கடிதத்தை அனுப்பினர்.  அதில், கட்சிக்கு நிரந்தர  தலைவரை தேர்வு செய்தல், பொதுத் தேர்தல்  தோல்விக்கான காரணம், இடையிடையே நடந்த மாநில பேரவை தேர்தல்களில்  தோல்வி  குறித்து ஆலோசனை நடத்த வேண்டும் என்று எழுதியிருந்தனர். இக்கடிதம்  ​​கட்சிக்குள் பெரும் பரபரப்பையும்,  தலைமைக்கு நெருக்கடியையும்  ஏற்படுத்தியது.

இந்நிலையில், மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான கமல்நாத், கட்சியின் இடைக்காலத்  தலைவர் சோனியா காந்திக்கு தற்போது கடிதம் எழுதி உள்ளார். அதில், ’கட்சியின் 23 அதிருப்தி தலைவர்கள் சந்திப்பு கூட்டத்தை  நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தி உள்ளார். அதனால், நாளை (டிச. 19) அதிருப்தி தலைவர்களுடன்  சோனியாகாந்தியின் சந்திப்பு இருக்கும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கட்சிக்குள் ஏற்பட்ட மோதல்களுக்கு மத்தியில் கமல்நாத்  மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த சந்திப்புக்கு அதிருப்தி தலைவர்களும் சம்மதித்து உள்ளனர்.

கமல்நாத் இருதரப்பையும் ஒருங்கிணைக்கும் ‘மத்தியஸ்த’ தலைவராக கருதப்படுகிறார். இவரது முயற்சியின்படி சோனியா - 23  தலைவர்கள் சந்தித்து கூட்டம் நடக்கும்பட்சத்தில் அது கட்சிக்குள் ‘நல்லிணக்கத்தை’ ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது. இந்த  சந்திப்பின் போது முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மற்றும் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி ஆகியோர் பங்கேற்பார்களா?  என்பது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் இல்லை.  இதுகுறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘பல மாநிலங்களில்  கட்சியின் செயல்திறன் வெகுவாக குறைந்து வருவது கவலையளிக்கும் விஷயமாக பார்க்கப்படுகிறது. கட்சித் தலைமை - 23  அதிருப்தி தலைவர்களை ஒருங்கிணைக்கும் பணியில் கமல்நாத் ஈடுபட்டுள்ளார். சோனிய காந்தியுடன் 23 அதிருப்தி தலைவர்களில்  குறைந்தது 6 பேராவது சந்திக்க வாய்ப்புள்ளது’ என்றனர்.

ஏற்கனவே கடந்த டிச. 8ம் தேதி கட்சி பிரச்னைகள் குறித்து சோனியா காந்தியை கமல்நாத் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  இதற்கிடையே, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் இன்று டெல்லிக்கு வருகிறார். அவர், மாநிலத்தில் கூட்டணியில் அங்கம்  வகித்த ஒரு கட்சி அரசுக்கு அளித்த ஆதரவை வாபஸ் பெற்றதும், அமைச்சரவை விரிவாக்கம் குறித்து (சச்சின் பைலட் விவகாரம்)  பேசவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காங்கிரஸ் கட்சியின் அடுத்தடுத்த நகர்வுகளால் கட்சிக்கு அடுத்த மாதம் வாக்கில்  நடைபெறவுள்ள புதிய தலைவர் தேர்வு குறித்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: