×

டெல்லி பேரவையில் சட்ட நகலை கிழித்த விவகாரம்: யாரை முட்டாளாக்க முயற்சி செய்கின்றீர்?: கெஜ்ரிவால் மீது ஹர்சிம்ரத் கவுர் காட்டம்

புதுடெல்லி: மத்திய அரசின் வேளாண் சட்ட நகலை டெல்லி சட்டப்பேரவையில் கிழித்த முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் செயலை, முன்னாள் மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கவுர் கண்டித்துள்ளார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி, டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ள டெல்லி அரசு, அவர்களுக்கு குடிநீர், மருத்துவம் உள்ளிட்ட  வசதிகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில், டெல்லி சட்டப்பேரவையில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானத்தை நிறைவேற்றி உள்ளது.

அப்போது பேசிய முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ‘ஆங்கிலேயேர்களை விட  மோசமாக மத்திய அரசு மாறிவிடக் கூடாது. அதனால், ஒவ்வொரு விவசாயியும் பகத் சிங்கைப் போல மாறி போராடி வருகின்றனர்’ என்றார். தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருந்த அரவிந்த் கெஜ்ரிவால், ஒரு கட்டத்தில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களின் நகல்களை கிழித்தெறிந்து தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். இவரது நடவடிக்கைக்கு பலரும் கண்டனங்களை  தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பாஜ கூட்டணியில் இருந்து சமீபத்தில் விலகிய முன்னாள் மத்திய அமைச்சரும்,  சிரோமணி அகாலி தளம் மூத்த தலைவருமான ஹர்சிம்ரத் கவுர் கூறுகையில், ‘வேளாண் சட்டத்தை மத்திய அரசு  நிறைவேற்றிய போது, அதற்கு கெஜ்ரிவால் ஆதரவு தெரிவித்தார். அவர் தற்போது பேரவை கூட்டத்தில் வேளாண் சட்டங்களின் நகல்களைக் கிழித்து எறிந்தது கண்டனத்துக்குரியது.

அவர் அவையில் வெட்கக்கேடான மற்றும் மலிவான அரசியலை நிகழ்த்தி உள்ளார். நீங்கள் யாரை முட்டாளாக்க முயற்சி செய்கின்றீர்? விவசாயிகளை ஏமாற்ற முடியாது. வேளாண் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துவிட்டு தற்போது டெல்லி  உறைபனி குளிரில் விவசாயிகளுடன் அவர் அமர்ந்திருப்பதை பார்த்தால் வேடிக்கையாக உள்ளது. அவர் தனது மீது விழுந்த கறைகளை அழிக்க முயற்சிக்கிறார். கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியினர் தங்களது போராட்டத்திற்கு முழு  ஆதரவையும் வழங்கவில்லை என்பதை விவசாயிகள் அறிவார்கள். கெஜ்ரிவால் மத்திய அரசின் உத்தரவின் பேரில் ஆடுகிறார்’ என்றார்.



Tags : Delhi Assembly ,Harsimrat Kaur ,Kejriwal , Leaked copy of law in Delhi Assembly: Who are you trying to fool ?: Harsimrat Kaur on Kejriwal
× RELATED இனிப்பு வகைகளை வேண்டுமென்றே...