×

ஜெயலலிதாவுடன் சேர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் படங்களுக்கு அதிமுக எம்எல்ஏ அஞ்சலி

உசிலம்பட்டி: ஜெயலலிதா படத்துடன் சேர்த்து இபிஎஸ், ஓபிஎஸ் படங்களுக்கும், உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ மாலை அணிவித்து அஞ்சலி  செலுத்திய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. மதுரை மாவட்டம், எழுமலை அருகே எம்.கல்லுப்பட்டியில் மினி கிளினிக் திறப்பதற்காக அமைச்சர் உதயகுமார் நேற்று பகல் 1  மணியளவில் வருவதாக இருந்தார். அமைச்சர் வருவதற்கு நேரமாகிவிட்டது. இதனால் உசிலம்பட்டி அதிமுக எம்எல்ஏ நீதிபதி,  அமைச்சர் வருவதற்குள் கட்சி கொடியேற்றி, ஜெயலலிதா உருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்தலாம் என அதிமுக  நிர்வாகிகளிடம் கூறினார்.

அப்போது ஜெயலலிதா தனி உருவப்படம் கிடைக்கவில்லை. எனவே, விளம்பரத்திற்காக வைக்கப்பட்ட ஜெயலலிதா, முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் புகைப்படங்கள் அடங்கிய பேனரை எடுத்து வந்து அதிமுக  நிர்வாகிகள் வைத்தனர். இதையடுத்து எம்எல்ஏ நீதிபதி, ஜெயலலிதா, இபிஎஸ், ஓபிஎஸ் என அனைவருக்கும் சேர்த்து மாலை  அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இறந்தவர் படத்திற்குத்தான் அஞ்சலி செலுத்துவது வழக்கம். ஆனால் ஜெயலலிதாவுடன் சேர்த்து உயிரோடு இருக்கும் முதல்வர்,  துணை முதல்வருக்கும் எம்எல்ஏ அஞ்சலி செலுத்தியதால் பொதுமக்கள் முகம் சுழித்தனர்.


Tags : AIADMK MLA ,Jayalalithaa , AIADMK MLA pays homage to EPS and OPS films along with Jayalalithaa
× RELATED அதிமுக முன்னாள் எம்எல்ஏ மரணம்