ஆந்திர முதல்வர் ஜெகனின் 3 தலைநகர் திட்டத்தை மக்கள் ஆதரித்தால் அரசியலை விட்டு விலகுகிறேன்.. சந்திரபாபு நாயுடு சவால்!!

ஹைதராபாத் : அமராவதியைக் கைவிட்டு மூன்று தலைநகர் திட்டத்திற்கு மக்கள் ஆதரவு அளித்தால், நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன் என்று சந்திரபாபு நாயுடு சவால் விடுத்துள்ளார். ஆந்திராவில் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி ஆட்சி நடத்தி வருகிறது. அங்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, எதிர்க்கட்சித் தலைவராக உள்ளார். சந்திரபாபு நாயுடு ஆட்சியின் போது, ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகராக அமராவதியை உருவாக்குவதற்குத் திட்டமிடப்பட்டது. இதற்காக, தலைநகர் மண்டல வளர்ச்சி ஆணையம்(சிஆர்டிஏ) ஏற்படுத்தப்பட்டு, மிகப் பிரம்மாண்டமாகச் சட்டசபை வளாகம் கட்டப்பட்டு வந்தது.

ஆனால் ஜெகன் அரசு, அமராவதி திட்டத்தை ரத்து செய்யவும், 3 தலைநகர் உருவாக்கவும் 2 சட்ட மசோதாக்களை ஜெகன் அரசு சட்டசபையில் நிறைவேற்றியது. இதன்படி, அமராவதியில் சட்டசபை மட்டும் இருக்கும். ராஜ்பவன், தலைமைச் செயலகம், அனைத்து துறை தலைமை அலுவலகங்கள் ஆகியவை விசாகப்பட்டினத்தில் இயங்கும். நீதிமன்றங்கள் அனைத்தும் கர்னூல் நகரில் இயங்கும். இந்த மூன்றுமே தலைநகர்களாக அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், அமராவதியை மாநில தலைநகராக தக்கவைத்துக்கொள்வதற்கான விவசாயிகள் போராட்டத்தின் முதல் ஆண்டு நிறைவைக் குறிக்கும் விதமாக ராயபுடி கிராமத்தில் அமராவதி ஜனபேரி என்ற பிரமாண்ட பேரணி நடந்தது. இதில் பங்கேற்று உரை நிகழ்த்திய தெலுங்கு தேசம் தலைவர் சந்திரபாபு நாயுடு,

அமராவதி தலைநகர் திட்டத்தை மக்கள் விரும்புகிறார்கள். அதை மாற்றக் கூடாது. முதல்வர் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மாநிலத்தின் ஆறு கோடி மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப மாநில தலைநகரை இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும். ஜெகன் அரசு கொண்டு வரும் 3 தலைநகர் திட்டத்தின் மீது மக்களிடம் வாக்கெடுப்பு நடத்த வேண்டும். மக்கள் அதை ஆதரித்தால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன், என்றார்.

Related Stories: