×

2 ஆண்டுகளாகியும் கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை.. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தமிழக அரசுக்கு ஆர்வமில்லையா ?: நீதிபதிகள் கேள்வி

மதுரை: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகளாகியும் மருத்துவமனை கட்டுவதற்கான நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் காலதாமதம் ஏற்படுவதாகவும், அதற்குரிய நிதியை ஒதுக்கி, உடனடியாக கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த உத்தரவிடக் கோரியும் மதுரையைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொது நலன் மனு தாக்கல் செய்தார். .

இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த போது, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் அரசுக்கு ஆர்வம் இல்லை என்றே தெரிய வருகிறது என்று குறிப்பிட்டனர்.மேலும், மதுரையில் எய்ம்ஸ் அமையும் என்று அறிவித்துவிட்டு தாமதம் செய்வது ஏன்? மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க அரசுக்கு ஆர்வமில்லையா? 2019-ம் ஆண்டு ஜனவரியில் அடிக்கல் நாட்டப்பட்ட நிலையில் தற்போது வரை, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தொடங்கவில்லை. வழக்கில் தமிழக அரசு பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பப்பட்டு இரண்டு மாதங்களாகியும், இதுவரை அரசிடமிருந்து முறையாக பதில் அளிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதே நிலை தொடர்ந்தால் சுகாதார செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் ஆஜராக நேரிடும், என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதற்கு, எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க நிலத்தை கையகப்படுத்துவதில் சில பிரச்னைகள் இருப்பதால் மருத்துவமனை அமைவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதாக தமிழக அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. தொடர்ந்து, அரசு தரப்பில் கூடுதல் வழக்கறிஞர் ஆஜராக அவகாசம் கோரியதை அடுத்து வழக்கு சிறிது நேரம் ஒத்திவைக்கப்பட்டது.

Tags : government ,Tamil Nadu ,Judges ,Madurai AIIMS Hospital , Madurai, AIIMS, Hospital, Government of Tamil Nadu, Judges, Question
× RELATED பேருந்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு...