×

சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி செல்லும் நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோருவது ஏன் : மனுதாரருக்கு குட்டு வைத்த நீதிபதிகள்!!

சென்னை : சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரிய மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2021ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பை சாதிவாரியாக நடத்தக் கோரி வழக்கறிஞர் ஆனந்த்பாபு  மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் சத்தியநாராயணன், பொங்கியப்பன் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்த போது, சாதி இல்லாத சமுதாயத்தை நோக்கி செல்லும் நிலையில், சாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த கோருவது ஏன் என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது மனுதாரர் தரப்பு வழக்கறிஞர் ஆஜராகி, இட ஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு அவசியம் என்று கூறினார்.

இதை கேட்ட நீதிபதிகள்,  அரசியல் சாசனத்தின்படி மனுவில் கோரியுள்ள கோரிக்கைகளை ஏற்க முடியாது என்று குறிப்பிட்டனர்.  இதற்கு பதிலளித்த மனுதாரர் தரப்பு,ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பல்வேறு சாதியினர் தங்களது மக்கள் தொகைக்கேற்ப இட ஒதுக்கீடு கேட்டு போராட்டம் நடத்துகின்றனர், என்றார். சில சாதிகள் போராட்டங்கள் நடத்துவதாக கூறி மனுதாரர் வாதத்தை நிராகரித்த நீதிபதிகள், போராட்டங்களால் எதையும் அடைய முடியாது என்று கருத்து தெரிவித்தனர். இறுதியாக இந்திய அரசியல் சாசனப்படி மனுதாரரின் கோரிக்கையை ஏற்க முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Tags : Judges ,petitioner , Caste, Population, Census, Judges
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...