×

தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் மழை 10,000 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் மூழ்கியது: முளைத்ததால் விவசாயிகள் வேதனை

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் சம்பா மற்றும் தாளடி நெற்பயிர்கள் நடப்பாண்டு 1,35,147 ஹெக்டேரில் நடவு செய்யப்பட்ட நிலையில் புரெவி புயல் காரணமாக தொடர் மழை பெய்ததால் தஞ்சை மாவட்டத்தில் 11,730 ஹெக்டேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக வேளாண் துறை இயக்குநர் தட்சிணாமூர்த்தி தெரிவித்தார். இந்நிலையில் கடந்த 16ம் தேதி முதல் அவ்வப்போது தொடர் மழை காரணமாக ஏற்கனவே மழையால் அறுவடை செய்யும் நேரத்தில் சாய்ந்த நெற்கதிர்கள் முளைக்க துவங்கியுள்ளது.

இதனால் மாவட்டம் முழுவதும் 10 ஆயிரம் ஏக்கர் வயலில் தற்போது பெய்த மழைநீர் தேங்கியுள்ளதால் அறுவடைக்கு தயாரான நெற்கதிர்கள் சாய்ந்து மழைநீரில் மூழ்கி நாசமானது. வயல்களில் மழைநீர் தேங்கியுள்ளதால் அதை வடிய வைக்கும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வந்தாலும், ஏற்கனவே ஈரப்பதம் அதிகமாக இருந்ததால் தற்போது நெல்மணிகள் முளைக்க துவங்கியுள்ளது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படுவதால் கவலையில் உள்ளனர்.

இதுகுறித்து துறையுண்டார்கோட்டை விவசாயிகள் கூறியதாவது: கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. தொடர்ந்து ஈரப்பதம் இருந்ததால் நெல்மணிகள் முளைக்க ஆரம்பித்து விட்டது. இந்த பகுதியில் மட்டும் 150 ஏக்கரில் அறுவடைக்கு தயாரான நெல் பாதிக்கப்பட்டுள்ளது. எங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

தரைப்பாலம் மூழ்கியது: விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகளவில் கனமழை பெய்ததால் நீர்நிலைகள் நிரம்பியது. இதனால் பிரம்மதேசம் ஏரி மற்றும் வன்னிப்பேரில் உள்ள செம்பேரி ஏரி நிரம்பி கலிங்கல் வழியாக மழைநீர் அதிகளவில் வெளியேறியதால் வன்னிப்பேரில் உள்ள ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் ராஜாம்பாளையத்திலிருந்து வன்னிப்பேருக்கு செல்லும் சாலையில் உள்ள தரைப்பாலம் நீரில் மூழ்கியது. இதனால் கிராம  இளைஞர்கள் ஓடையின் இருபுறமும் கயிறு கட்டி அதன்மூலம் பொதுமக்களை பத்திரமாக அழைத்து வந்தனர்.

Tags : district ,Tanjore , 10,000 acres of paddy ready for harvest in Tanjore district again due to rains: Farmers suffer due to germination
× RELATED செல்போனை திருடியதாக கூறியதால் ஆத்திரம்: அண்ணனை கொன்று எரித்த தம்பி