×

2வது மாடியில் இருந்து விழுந்ததால் மூளைச்சாவு: கண்டங்களை கடந்து 7 பேர் உயிரை காப்பாற்றிய 2 வயது இந்திய குழந்தை; உறுப்புதானம் வழங்கிய பெற்றோர்

சூரத்: உடல் உறுப்பு தானம்தான் மனித வாழ்க்கையின் மிக உயரிய தானமாக கருதப்படுகிறது. உடல் உறுப்புக்கள் தானம் மூலமாக பல உயிர்கள் காப்பற்றப்படுகின்றன. பலர் மறுவாழ்வு பெறுகின்றனர். குறிப்பாக, மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புக்களை தானம் செய்வதன் மூலமாக ஒரே நேரத்தில் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. ஆனால், தனது தாய், தந்தை, மகன், மகள் என நெருங்கிய உறவுகள் மூளைச்சாவு அடைந்ததாக மருத்துவர்கள் கூறும் அந்த துயரமான நேரத்தில், உடல் உறுப்புக்கள் தானம் குறித்து பாதிக்கப்பட்டோர் நினைத்து பார்ப்பது என்பது இயலாத ஒன்று.

எனினும், இது போன்ற கடினமான சூழலிலும், தனது சொல்லொணத் துயரத்திலும் கூட சிலர் பிறர் வாழ்க்கையை குறித்து சிந்தித்து பார்த்து உடல் உறுப்புக்கள் தானத்துக்கு சம்மதிப்பது, சிலிர்ப்பை ஏற்படுத்துகின்றது. அங்கொன்றும் இங்கொன்றுமாக இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக, சத்தமில்லாமல் அரங்கேறி கொண்டு தான் இருக்கின்றது. இதேபோன்ற சம்பவம் குஜராத்தின் சூரத்தில் நடந்துள்ளது. தனது இரண்டரை வயது குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டது என அறிந்த பெற்றோர், அந்த வேதனையிலும், துக்கத்திலும் எடுத்த முடிவால், இன்று 7 பேரின் உயிரை காப்பாற்றி அவர்களுக்கு இந்த பூமியில் வாழ்வதற்கான மீண்டுமொரு அரிய வாய்ப்பை வழங்கி உள்ளது.

சூரத்தின் பாதர் பகுதியில் உள்ள சாந்தி பேலசை சேர்ந்தவர் சஞ்ஜீவ் ஓசா. அவருடைய மனைவி அர்ச்சனா. இவர்களின் இரண்டரை வயது ஆண் குழந்தை ஜாஷ் ஓஷா. கடந்த 9ம் தேதி எதிர்பாராத விதமாக வீட்டின் 2வது மாடியில் இருந்து தவறி விழுந்தான். ரத்தக் காயங்களோடு விழுந்து கிடந்த பச்சிளம் தளிரை கண்டு துடித்துப் போன பெற்றோர், மருத்துவமனைக்கு தூக்கிக் கொண்டு ஓடினார்கள். மருத்துவர்கள் தொடர்ந்து குழந்தைக்கு சிகிச்சை அளித்தனர். கடந்த 14ம் தேதி குழந்தை மூளைச்சாவு அடைந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

அதிர்ச்சியில் உறைந்தனர் பெற்றோர். தங்கள் மகன் தங்களை விட்டு செல்லப் போகிறான் என்ற துயரமான நேரத்தில், இறந்தாலும் அவர் உயிர் வாழ வேண்டும் என்ற திடமான முடிவை அவர்கள் எடுத்தனர். தனது செல்லக் குழந்தையின் உடலை கூறு போடுவார்கள் என தெரிந்தும், அவனுடைய உடல் உறுப்புக்களை தானம் செய்வதாக அறிவித்தனர். குழந்தையின் இதயம், சீறுநீரகம், கல்லீரல், நுரையீரல், கண்கள் எடுக்கப்பட்டன.  அவை இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 7 பேருக்கு பொருத்தப்பட்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.

* ஜாசின் இதயமும், நுரையீரமும் விமானம் மூலமாக 3 மணி நேரத்தில் சென்னைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இதயம் ரஷ்யாவை சேர்ந்த 4 வயது சிறுமிக்கு வெற்றிகரமாக பொருத்தப்பட்டது.
* சிறுநீரகம் சாலை மார்க்கமாக அகமதாபாத் சிறுநீரக நோய் மற்றும் ஆராய்ச்சி மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு, 13 வயது சிறுமிக்கும், சூரத்தை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அவை பொருத்தப்பட்டது.
* குழந்தையின் நுரையீரல், சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற உக்ரைனை சேர்ந்த 4 வயது குழந்தைக்கு பொருத்தப்பட்டது.

மூளைச்சாவு என்பது மூளை செயல் இழந்த நிலையில் தன்னிலைக்கு மீண்டு வரமுடியாத நிலையாகும். அவரது இதயம் இயங்கினாலும் சுயமாக மூச்சுவிட முடியாது. எனவேதான், இதை மரணத்துக்கு சமம் என்கின்றனர்.

Tags : Parents ,Indian ,continents , Brainwashing after falling from 2nd floor: 2-year-old Indian child saves 7 lives across continents; Parents who donated organs
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...