×

நாட்டில் நிலவும் அசாதாரண சூழல் நேரத்தில் நாடாளுமன்ற கூட்டத்தொடரை தன்னிச்சையாக ரத்து செய்வதா? மத்திய அரசுக்கு திமுக கடும் கண்டனம்

சென்னை: “நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்ச நீதிமன்றமே உணர்ந்து தீர்வுகாண முன்வருகின்ற நேரத்தில்-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது” என்று டி.ஆர்.பாலு கூறியுள்ளார். திமுக பொருளாளரும் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான டி.ஆர்.பாலு வெளியிட்ட அறிக்கை. கொரோனா நோய்த் தொற்றைக் காரணம் காட்டி நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை மத்திய பாஜ அரசு ரத்து செய்திருப்பதற்கு திமுகவின் சார்பில் கடுமையான எதிர்ப்பினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

“இந்திய-சீன உறவு மிக மோசமான நிலையில் இருக்கிறது” என்று ஒருபுறம் நாட்டின் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் சுட்டிக்காட்டியுள்ள, எல்லையில் பிரச்னை-இன்னொரு பக்கம் தலைநகர் டெல்லியின் எல்லையில் பல்வேறு மாநிலங்களிலிருந்து வந்து விவசாயிகள் இரவு பகலாக தங்களின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் போராட்டம் என்று மிக தலையாய பிரச்னைகள் இன்றைக்கு அணிவகுத்து நிற்கின்றன. இப்பிரச்னைகள் குறித்தெல்லாம்  விவாதிக்க வேண்டிய மிக முக்கியமான காலகட்டத்தில்-நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடரை நடத்த மத்திய பாஜ அரசு விரும்பவில்லை என்பது மிகுந்த கவலையளிக்கிறது.

“விவசாயிகள் போராட்டம் தேசிய பிரச்னையாக மாறலாம்” என்று எச்சரித்துள்ள உச்ச நீதிமன்றம் திறந்த மனதுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தியிருக்கிறது. நாட்டில் நிலவும் அசாதாரண சூழலை உச்ச நீதிமன்றமே உணர்ந்து தீர்வு காண முன்வருகின்ற நேரத்தில்-மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எதைப் பற்றியும் கவலைப்படாமல் நாடாளுமன்றக் கூட்டத் தொடரை ரத்து செய்திருப்பது கண்டனத்திற்குரியது. இந்தியாவிலேயே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக உள்ளிட்ட முக்கிய அரசியல் கட்சிகளின் தலைவர்களிடம் குளிர்காலக் கூட்டத்தை ரத்து செய்வது குறித்துக் கலந்து ஆலோசனை கூட நடத்தாமல்-எதேச்சதிகாரமாக முடிவு எடுத்து “நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத் தொடர் நடக்காது” என்று அறிவிப்பது ஏற்றுக்கொள்ள இயலாத நடைமுறை.

விவாதங்கள் ஏதுமின்றி-மக்கள் பிரதிநிதிகளின் கருத்துக்களை அறிந்துகொள்ள மனமின்றி-அவசரச் சட்டங்களை நிறைவேற்றுவதே மார்க்கம் என்று ஒரு ஆட்சியை நடத்தலாம் என்று மத்திய பாஜ அரசு இன்னமும் நினைத்துக் கொண்டிருப்பது மிகப்பெரிய ஜனநாயகப் படுகொலை. ஆகவே, எதிர்க்கட்சிகளைப் புறக்கணித்து “பெரியண்ணன்” பாணியில் இதுபோன்று செயல்படும் போக்கை மத்திய பாஜ அரசு உடனடியாக கைவிட்டு “கருத்தொற்றுமை” “ஜனநாயகம்” என்ற உன்னதமான பாதைக்குத் திரும்ப வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : session ,Parliamentary ,country ,government ,DMK , Will the parliamentary session be canceled arbitrarily at a time of extraordinary circumstances prevailing in the country? DMK strongly condemns the central government
× RELATED திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி வாக்கு...