×

மீண்டும் ரயில் சேவை தொடக்கம் இந்தியா - வங்கதேசம் இடையே 7 ஒப்பந்தங்கள் கையெழுத்து: மோடி - ஹசீனா பேச்சில் உடன்பாடு

புதுடெல்லி: இந்தியா - வங்கதேசம் இடையிலான ஹால்திபரி - சிலாஹதி ரயில்பாதை சேவையை 55 ஆண்டுகளுக்குப் பிறகு இருநாட்டு பிரதமர்களும் நேற்று காணொலி மூலமாக தொடங்கி வைத்தனர். மேலும், இருநாடுகளுக்கும் இடையே 7 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
 இந்தியாவும், வங்கதேசமும் நெருங்கிய நட்பு நாடாக திகழ்ந்து வருகின்றன. கடந்த ஆண்டு அக்டோபரில் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா அரசு முறை பயணமாக இந்தியா வந்து சென்றார்.

கொரோனா நோய் தொற்று காலத்திலும் இருநாட்டு பிரதமர்களும் தொடர்ந்து தொடர்பில் இருந்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக பிரதமர் மோடியும், ஷேக் ஹசீனாவும் நேற்று காணொலி மூலமாக பேச்சுவார்த்தை நடத்தினர். கொரோனா நோய் தொற்று காலத்துக்கு பின் இருநாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இருநாட்டு பிரதமர்களும் பேசினர்.

பின்னர், இந்தியா - வங்கதேசம் இடையிலான ஹால்திபரி - சிலாஹதி ரயில்வே சேவையை மோடியும், ஹசீனாவும் காணொலி மூலமாக தொடங்கி வைத்தனர். இந்த ரயில்பாதை 55 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் தொடங்கப்பட்டு உள்ளது. ஹால்திபரி ரயில் நிலையம், மேற்கு வங்கத்தில் உள்ளது.
இது, இருநாடுகளையும் இணைக்கும் 5வது இணைப்பு பாதையாகும். தொடர்ந்து, வங்கதேசத்தின் தந்தை என அழைக்கப்படும் ஷேக் முஜிபுர் ரஹ்மான் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு நினைவு தபால் தலை வெளியிடப்பட்டது. மேலும், இருநாட்டு தலைவர்களும் பாதுகாப்பு உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு அளிப்பதற்கான 7 ஒப்பந்தங்களிலும் கையெழுத்திட்டனர்.

அப்போது பேசிய பிரதமர் மோடி, வங்க தேசம் இந்தியாவின் அண்டைநாடு கொள்கையின் குறிப்பிடத்தக்க தூணாக வங்கதேசம் இருக்கிறது. வங்கதேசத்துடான உறவை மேம்படுத்த எனது அரசு கடும் முயற்சி செய்துள்ளது. நான் பதவியேற்ற முதல் நாளில் இருந்து வங்கதேசத்துடான உறவை வலுப்படுத்தவதற்கு முன்னுரிமை கொடுத்து வருகிறேன். இந்த ஆண்டு கொரோனா நோய் தொற்று காரணமாக சவால்கள் நிறைந்துள்ளது. இந்த தருணத்திலும் சுகாதார பணிகள், கொரோனா தடுப்பூசி போன்ற துறையில் இணைந்து பணியாற்றுவதில் இருநாடுகளுக்கும் இடையே சிறந்த ஒத்துழைப்பு இருக்கிறது.

உங்களது அரசு கொரோனா நோய் தொற்று சவாலை எதிர்கொண்ட விதத்தை நான் பாராட்டுகிறேன்” என்றார். தொடர்ந்து பேசிய வங்க தேச பிரதமர் ஷேக் அசீனா, இந்தியா வங்கதேசத்தின் உண்மையான நண்பன். 1971ம் ஆண்டு வங்கதேச விடுதலை போரில் 30லட்சம் வீரர்கள் உயிர்நீத்தனர். அவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன். எங்களது சுதந்திரத்துக்கு முழுமனதுடன் ஆதரவு அளித்த இந்திய அரசு மற்றும் இந்திய மக்களுக்கு நன்றி செலுத்துகிறேன். வங்கதேசம் 50வது சுதந்திர ஆண்டை கொண்டாடும் தருணத்தில் இருக்கின்றது. 2021 மார்ச் 26ம் தேதி  பிரதமர் மோடியின் டாக்கா வருகையானது வங்க தேசத்தின் சுதந்திர போர் நினைவு விழாவின் மகுடமாக இருக்கும்” என்றார்.

Tags : India ,Bangladesh ,talks ,Modi-Hasina , India-Bangladesh to sign 7 agreements: Modi-Hasina talks
× RELATED பங்களாதேஷ் நாட்டில் இருந்து...