×

ஆஸிக்கு எதிரான முதல் டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம்

அடிலெய்டு: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நிதானமாக விளையாடிய இந்தியா முதல்நாள் ஆட்ட நேர முடிவில் 6விக்கெட் இழப்புக்கு 233 ரன் எடுத்துள்ளது. ஆஸ்திரேலியா-இந்தியா இடையே பகல்/இரவு போட்டியாக நடத்தப்படும் முதல் டெஸ்ட் போட்டி அடிலெய்டு ஓவல் அரங்கில் நேற்று தொடங்கியது. இளஞ்சிவப்பு வண்ண பந்தை கொண்டு நடக்கும் இதில் டாஸ் வென்ற இந்தியா முதலில் களம் இறங்க முடிவு செய்தது.இந்திய அணியில் நேற்று முன்தினம் பிசிசிஐ அறிவித்த அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஆஸ்திரேலிய அணியில் அறிமுக வீராக கேமரான் கிரீன் களம் கண்டார். அவருக்கு ஆஸி வீரருக்கான தொப்பியை மூத்த வீரர் பேட் கம்மின்ஸ் வழங்கினார்.


பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகள், அணியின் எதிர்பார்ப்புகளுடன்  பிரித்வி ஷா, மயாங்க் அகர்வாலுடன் தொடக்க வீரராக களம் கண்டார். முதல் ஓவரை மிட்செல் ஸ்டார்க்.  முதல் ஓவரின் 2வது பந்தில் டக் அவுட்டாகி வெளியேறினார் ஷா. ஆரம்பத்திலேயே இந்திய அணிக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்த ஆஸி வீரர்கள் மேலும் உற்சாகமானார்கள். அதனால் மயாங்க், உடன்  ஜோடி சேர்ந்த சித்தேஷ்வர் புஜாராவும் மிக நிதானமாக விளையாட ஆரமபித்தனர். ஆனாலும் 19வது ஓவரில்  மாயங்கை போல்டாக்கி பெவிலியன் அனுப்பினார் பேட் கம்மின்ஸ். அப்போது மயாங்க் 17 ரன் எடுத்திருந்தார். இந்தியா 18.1ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 32 ரன் மட்டுமே எடுத்திருந்தது.


அடுத்தடுத்து விக்கெட்களை இழந்ததால், புஜாராவுடன் இணை சேர்ந்த கேப்டன் விராத் கோஹ்லி  பொறுப்புடன் விளையாட தொடங்கினார். அதற்கேற்ப ரன் எண்ணிக்கை மெதுவாக உயர்ந்தது. அதனால் தேநீர் இடைவேளையின் போது இந்தியா 25ஓவருக்கு 2 விக்கெட்களை இழந்து 41ரன் எடுத்திருந்தது. மேலும் 50வது ஓவரில்தான் இந்தியா 100 ரன்னை எட்டியது. ஆனால் அதே ஓவரில் நாதன் லயன் பந்துவீச்சில்  புஜாரா ஆட்டமிழந்தார்.  புஜாரா 43ரன்னில் வெளியேற, துணைக் கேப்டன் அஜிங்கிய ரஹானே களம் புகுந்தார். அவரும் ஒருபக்கத்தில் பொறுமையை கடைபிடிக்க,  கோஹ்லி 61வது ஓவரில்  அரைசதத்தை எட்டினார். மேலும் 87வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் கோஹ்லிக்கு இது 23வது அரைசதமாகும். அதன்பிறகு  கொஞ்சம் வேகம் காட்டினார் கோஹ்லி.

ஆனால் அதற்கு ரஹானே ஆப்பு வைத்தார். ஆட்டத்தின் 77வது ஓவரில் லயன் வீசிய பந்தை ரஹானே அடித்தார். பந்தை உடனே மடக்கினார் ேஜாஷ் ேஹசல்வுட். அதை பார்த்த ரஹானே,  மீண்டும் கோஹ்லியை திரும்ப ஓடச் சொன்னார். அவர் திரும்பி ஓடுவதற்குள் ஹசல்வுட் பந்து லயன் கைவசம் வர ரன்அவுட் அரங்கேறியது. கோஹ்லி   74 ரன்(8பவுண்டரி) எடுத்திருந்தார்.  சிறிது நேரத்தில்  ரஹானேவை(42ரன், 3பவுண்டரி, 1சிக்சர்)) எல்பிடபிள்யூ செய்து  வெளியேற்றினார் ஸ்டார்க்.  அடுத்து 16ரன் எடுத்திருந்த விகாரியை எல்பிடபிள்யூ செய்தார் ேஹசல்வுட்.

அதன் பிறகு முதல்நாள் ஆட்டம் 89ஓவரில் முடிவுக்கு வந்தபோது இந்தியா 6 விக்கெட் இழப்புக்கு 233 ரன்  எடுத்திருந்தது. ஆர்.அஷ்வின் 15*ரன்னுடனும்,  விருத்திமான் சஹா 9* ரன்னுடனும் களத்தில் உள்ளனர். ஆஸி தரப்பில்  ஸ்டார்க் 2, கம்மின்ஸ், ஹசல்வுட், லயன் ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.இன்னும் 4 விக்கெட்கள் கைவசம் இருக்க 2வது நாள் ஆட்டத்தை இந்தியா இன்று தொடங்குகிறது. முதல்நாள் போல் பொறுப்பாக ஆடினால் இந்தியா 300 ரன்னை  கடக்கலாம்.

முறையீட்டால் கண்டம்
கோஹ்லி 16ரன் எடுத்திருந்தபோது, லயன் வீசிய பந்து, விக்கெட் கீப்பர்/கேப்டன் டிம்மிடம் கேட்ச் ஆனது. அவர் உடனே ‘அவுட்’ கேட்டார். ஆனால் நடுவர் புருஸ் ஆக்சன்ஃபோர்டு அவுட் தரவில்லை. அதன்பிறகு சக வீரர்களுடன் ஆலோசனை செய்த டிம், 3வது நடுவரிடம் முறையீடு செய்வதை தவிர்த்தார். ஆனால் ‘ரீபிளே’யில் பந்து கோஹ்லியின் கிளவுசில் பட்டு கேட்ச் ஆனது தெளிவாக தெரிந்தது. அதனால் தப்பித்த கோஹ்லி 74ரன் அடித்தார். அதேபோல் 50வது ஓவரில் லயன் வீசிய பந்து  புஜாரா தொடையில் பட்டு பந்து லாபுஷேன் கேட்ச் பிடித்தபோது  ஆஸி வீரர்கள் ‘அவுட்’ கேட்டனர். அப்போதும் நடுவர் ‘அவுட்’ தரவில்லை. ஆனால் கேட்ச் ஆனதை பார்த்ததும் புஜாரா கிரீசை விட்டு உடனே நடக்க ஆரம்பித்தார். ஆனால் நடுவர் ‘அவுட்’ தரவில்லை என்றதும் மீண்டும் கிரீசுக்கு திரும்பினார். அதை பார்த்ததும், ஆஸி உடனடியாக முறையீடு செய்தது. அதில் அவுட் உறுதியானது.

டாஸ் சொல்லும் வெற்றிக்கதை
விராத் கோஹ்லி இதுவரை டாஸ் வென்ற 26 டெஸ்ட்களில் ஒரு தோல்வியை கூட இந்தியா சந்தித்ததில்லை. மேலும் 21 டெஸ்ட்டில் இந்தியா வெற்றி வாகை சூடியுள்ளது. மேலும் 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. ஒரு போட்டி கைவிடப்பட்டது.


Tags : Test ,Aussies ,India , First Test against Aussies: India play calm
× RELATED இந்தியா – தென் ஆப்ரிக்கா இடையே...