×

டெல்லியில் மூன்று மாநகராட்சிகளில் 2,500 கோடி மோசடி புகாரை சிபிஐ விசாரிக்க வேண்டும்: குற்றம் நிரூபிக்காவிட்டால் பதவி விலக தயாரா?

கெஜ்ரிவாலுக்கு ஆதேஷ் குப்தா சவால்

புதுடெல்லி: பாஜ ஆளும் மாநகராட்சிகளில்  2,500 கோடி ஊழல்  நடந்துள்ளதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்குமாறு முதல்வர்  கெஜ்ரிவாலுக்கு பாஜ கட்சி சவால் விடுத்துள்ளதோடு,  குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படாவிட்டால் முதல்வர் பதவியிலிருந்து விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 15 ஆண்டுகளாக மூன்று மாநகராட்சிகளையும் பாஜ தொடர்ந்து ஆட்சி செய்து வருகிறது. ஆனால், கடந்த இரு சட்டமன்ற தேர்தலிலும் ஆம் ஆத்மி கட்சி வெற்றி பெற்றுள்ளதால் அக்கட்சி அடுத்ததாக மாநகராட்சி தேர்தலை குறிவைத்துள்ளது.  இதன் காரணமாக, பாஜவின் நிர்வாகம் பற்றியும், ஊழல்கள் குறித்தும் ஆம் ஆத்மி  குற்றச்சாட்டி வருகிறது. பாஜவும் ஆம் ஆத்மி அரசின் மீது புகார்களை அடுக்கி வருகிறது. இந்த பரஸ்பர குற்றச்சாட்டுக்களின் தொடர்ச்சியாக, மூன்று மாநகராட்சிகளுக்கும் வழங்க வேண்டிய நிலுவை தொகை ₹13,000 கோடியை விடுவிக்கக்கோரி கடந்த திங்கள் முதல் பாஜவினர் ஆம் ஆத்மி அமைச்சர்களின் வீடுகளை முற்றுகையிட்டு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு எதிர்வினையாக, புதுடெல்லி நகராட்சி கவுன்சிலின் நிதி ₹2400 கோடி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆம் ஆத்மி கட்சி திடீர் குற்றம்சாட்டியது. மேலும், இது தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  மற்றும் டெல்லி துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் வீடு முன்பாக ஆம் ஆத்மியினர் போட்டி போராட்டத்தை நடத்தினர். இதன்தொடர்ச்சியாக, மாநகராட்சிகளில் நடைபெற்ற இந்த நிதி முறைகேடு பற்றி விவாதிக்க நேற்று ஒருநாள் சிறப்பு சட்டசபை கூட்டத்தை சிசோடியா கூட்டினார். இந்நிலையில் தான்,  கெஜ்ரிவால் வீடு முன்பாக போராட்டம் நடத்தி வரும் மூன்று மேயர்களுடன் டெல்லி பாஜ பிரிவு தலைவர் அதேஷ்குப்தா நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத்தொகையை வழங்கும் விவகாரத்தை திசை திருப்பும் முயற்சியில் ஆம் ஆத்மி ஈடுபட்டுள்ளது.

ஆம் மற்றும் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) வடக்கு மற்றும் தெற்கு டெல்லி மாநகராட்சிகளுக்கு எதிராக ₹2500 கோடி மோசடி செய்ததாக தேவையற்ற மற்றும் நகைச்சுவையான குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது. இந்த புகார் குறித்த சுயஅதிகாரம் பெற்ற அமைப்பு அல்லது சிபிஐ கொண்டு விசாரிக்குமாறு நாங்கள் கெஜ்ரிவாலுக்கு சவால் விடுக்கிறோம். இந்த குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படாவிட்டால் அவர் முதல்வர் பதவியிலிருந்து விலக தயாரா? என்றும் கேள்வி எழுப்ப விரும்புகிறோம்.
ஆம் ஆத்மி கட்சி ஆட்சி அமைத்ததிலிருந்து மாநகராட்சிகளுக்கு வழங்க வேண்டிய நிதியை முழுமையாக வழங்கவில்லை. 50சதவீத நிதியை மட்டும் தாமதமாக வழங்கி  வந்துள்ளது. எம்சிடி நிதி விவகாரத்தில் நான்காவது நிதிக்குழுவின் பரிந்துரைகளுக்கு ஏற்ப நிதியை ஆம் ஆத்மி வழங்கவில்லை. இவ்வாறு குப்தா குற்றம்சாட்டினார்.

பாஜவின் இரட்டை வேடம் ஆம் ஆத்மி விமர்சனம்
சிபிஐ விசாரணை கோரும் விவகாரத்தில் பாஜ கட்சி இரட்டை வேடம் போடுவதாக ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது. இதுபற்றி அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் துர்கேஷ் பதக் கூறுகையில், “மாநகராட்சிகளில் ₹2400 கோடி நிதி முறைகேடு குறித்து சிபிஐ விசாரிக்க ஆம் ஆத்மி கட்சி தான் கோரிக்கை விடுத்தது. இதனை வலியுறுத்தியே எங்கள் கட்சி தலைவர்கள் அமித்ஷா வீடு நோக்கி பேரணி சென்று வலியுறுத்த முயன்றனர். ஆனால், அவர்களை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை நடத்த அழைத்து சென்றனர். உண்மையில் ஆம் ஆத்மி கட்சி இந்த விவகாரத்தில் உண்மையை வெளிகொண்டுவர சிபிஐ விசாரணை கோரியபோது, ஏஏபி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை கைது செய்தனர். பாஜ ஏன் இந்த விவகாரத்தில் இப்படி இரட்டை வேடம் போட வேண்டும்”  என விமர்சித்தார்.

Tags : CBI ,corporations ,Delhi , CBI to probe Rs 2,500 crore fraud case in three corporations in Delhi: Ready to resign if not proven guilty?
× RELATED சிறையில் இருந்தாலும் நாட்டுக்காக...