×

பந்தலூர் அருகே 3 பேரை கொன்ற காட்டு யானையை பிடிக்கும் பணி 2வது நாளாக தீவிரம்

பந்தலூர்,: பந்தலூர் அருகே 3 பேரை கொன்ற யானைக்கு மயக்க ஊசி செலுத்தப்பட்டது. இன்று 2வது நாளாக கும்கிகள் உதவியுடன் அதை பிடிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். பந்தலூர் அருகே சேரம்பாடி கண்ணம்பள்ளி பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி நாகமுத்து என்பவரை கடந்த வாரம் காட்டு யானை தாக்கி கொன்றது. இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ பகுதியில் வசித்து வந்த தி.மு.க. யூனியன் கவுன்சிலர் ஆனந்தராஜ், அவரது மகன் பிரசாந்த் ஆகிய இருவரையும் கடந்த 13ம் தேதி அதே காட்டு யானை தாக்கி கொன்றது. இந்த சம்பவங்களால் அந்த பகுதியில் பரபரப்பும், மக்கள் மத்தியில் அச்சமும் நிலவுகிறது.

பீதியடைந்த பொதுமக்கள் காட்டு யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதனை வலியுறுத்தி பந்தலூர் தாலுகா முழுவதும் கடைகளை அடைத்து தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் மற்றும் தொழிலாளர்கள், வியாபாரிகள், பொதுமக்கள் பந்தலூர் பஜாரில் சாலை மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து அட்டகாச யானையை பிடிக்க வனத்துறையில் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக வனத்துறையினரின் ரோந்து பணி மூலமும், ட்ரோன் மூலமும் காட்டு யானையின் நடமாட்டம் கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று சேரம்பாடி சப்பந்தோடு வனப்பகுதியில் யானை நடமாட்டம் இருப்பதாக அடையாளம் கண்டனர். அதனுடன் மேலும் 3 யானைகளும் இருந்தன. இதைத்தொடர்ந்து கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் அன்வர்தீன் தலைமையில், டி.எப்.ஓ. (பொறுப்பு) குருசாமி தபேலா, எசிஎப் விஜயன், ரேஞ்சர்கள் சின்னத்தம்பி, கணேசன், மனோகரன் மற்றும் கால்நடை மருத்துவர்கள் மனோகரன், சுகுமாரன், ராஜேஷ் உள்ளிட்ட மருத்துவ குழுவினர் அந்த பகுதியில் முகாமிட்டனர். 3 ேபரை கொன்ற யானையை மயக்க ஊசி செலுத்தி, கும்கிகள் உதவியுடன் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதற்காக முதுமலையில் இருந்து பொம்மன், வசீம், விஜய், டாப்சிலிப்பில் இருந்த கலீம் ஆகிய கும்கி யானைகள் வரவழைக்கப்பட்டன. அவற்றின் உதவியுடன் யானையை பிடிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. நேற்று மதியம் அந்த யானைக்கு துப்பாக்கி மூலம் டாக்டர் மனோகரன் மயக்க ஊசி செலுத்தினார். இதையடுத்து சிறிது மயக்க நிலையில் மற்ற 3 யானைகளிடம் இருந்து பிரிந்து சென்றது. சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் அந்த 3 யானைகளுடன் மயக்க ஊசி செலுத்தப்பட்ட யானை சேர்ந்துகொண்டனர். இதனால் யானையை பிடிப்பதில் தாமதம் ஏற்பட்டது.

அந்த காட்டு யானைக்கு தற்போது இன சேர்க்கை காலம் என்பதால் மதம் பிடித்த உள்ளதாகவும், இதனால்தான் அந்த யானை மற்ற 3 யானை கூட்டத்தில் இருந்து பிரிந்து செல்லாமல் உள்ளது என்றும் வனத்துறையினர் தெரிவித்தனர். எனவே அதனை தனிமைப்படுத்தி மீண்டும் மயக்க ஊசி ெசலுத்தி பிடிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் இறங்க உள்ளனர். நேற்று இரவு நேரமானதால் அந்த பணி நிறுத்தப்பட்டு இன்று 2வது நாளாக மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags : Pandharpur , The task of capturing the wild elephant that killed 3 people near Pandharpur has intensified for the 2nd day
× RELATED பந்தலூர் அருகே விவசாய நிலங்களை...