வெயில், மழையில் நனைந்து காவல்நிலையங்களில் ‘கண்டமாகும்’ வாகனங்கள்

காரைக்குடி: பல்வேறு வழக்குகளில் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை முறையாக பராமரிக்காததால் வெயில், மழையில் நனைந்து வீணாகி வருகின்றன. காரைக்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதியில் வடக்கு, தெற்கு காவல் நிலையம், அழகப்பாபுரம், சோமநாதபுரம், குன்றக்குடி, பள்ளத்தூர், செட்டிநாடு, சாக்கோட்டை என 8 காவல் நிலையங்கள் உள்ளன. இப்பகுதிகளில் குற்றங்களை தடுக்க போலீசார் அடிக்கடி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது முறையான ஆவணங்கள் இல்லாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன.

இதுதவிர வழிப்பறி, கட்டத்தல், மோசடி, திருட்டு உள்பட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு காவல்நிலையங்களில் நிறுத்தப்படுகின்றன. வாகன ஓட்டிகளில் சிலர் முறையான ஆவனங்களை காண்ப்பித்து வாகனத்தை எடுத்து செல்கின்றனர். சிக்கல் இருப்பின் வாகனங்களை அப்படியே விட்டு விடுகின்றனர். காரைக்குடி பகுதியிலுள்ள காவல் நிலையங்களில் லாரி, கார், ஆட்டோ, டூவீலர்கள் என 500க்கும் மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களை பாதுகாப்பான இடத்தில் நிறுத்தாமல் திறந்த வெளியில் நிறுத்தியுள்ளதால் வெயில், மழையில் நனைந்து துருப்பிடித்து வீணாகி வருகின்றன.

சம்மந்தப்பட்ட வாகனங்களின் வழக்குகளை போலீசார் விரைந்து முடித்து அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கேட்பாரற்ற வாகனங்களை ஏலம் விட்டால் அரசுக்கு வருவாய் கிடைக்கும். எனவே போலீஸ் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>