தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகம் என்ஐஓடி தொழில்நுட்பத்தில் மறுசீரமைப்பு: துறைமுக மேலாண்மை குழு உறுப்பினர் வலியுறுத்தல்

நித்திரவிளை: தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தை தேசிய பெருங்கடல் தொழில்  நுட்ப மைய (என்ஐஓடி) தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டுள்ளது. தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகம் ரூ.40 கோடி மதிப்பீட்டில் மத்திய-மாநில அரசுகள் நிதி ஒதுக்கீடு செய்து,  2004 டிசம்பர் 22ம் தேதி துறைமுகம் அமைப்பதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்தது.  2009ம் ஆண்டு  துறைமுக பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. ரூ.40 கோடி மதிப்பீட்டில் ஆரம்பிக்கப்பட்ட பணி காலதாமதம் காரணமாக ரூ.97 கோடியை கடந்து பணிகள் நடந்து வருகின்றன.

பணி நிறைவடையாத நிலையிலும் 2015ம் ஆண்டு முதல் மீன்பிடி கலன்கள் துறைமுகத்தை பயன்படுத்த துவங்கின. தேங்காபட்டிணம்  மீன்பிடி துறைமுகம் அமைந்துள்ள கடல் பகுதியானது 2 விதமான அலை  தாக்குதலை சந்திக்கிறது. ஜூன், ஜூலை மாதங்களில் கடலரிப்பு தடுப்பு  சுவரையும், மணலையும் இழுத்து செல்லும் விதமாகவும், நவம்பர், டிசம்பர்  மாதங்களில் கரை பகுதியில் மணலை கொண்டு சேர்க்கும் விதமாகவும் அலை ஏற்படும். 2 வித அலைகளின் தாக்கத்தையும் எதிர்கொள்ளும் விதத்தில்  கட்டமைப்புகள் அமைக்காததால் துறைமுக முகத்துவாரத்தில் ஏற்பட்ட நீர்  சுழற்சியில் விசைப்படகுகள்  சிக்கி  கடந்த ஜூலை முதல் நவம்பர் மாதம் வரை 5  மீனவர்கள் இறந்தனர்.

இதனால் துறைமுகம் சம்பந்தமாக கடலுக்குள் உருவாக்கும் கட்டமைப்புகளை மறுசீரமைப்பு செய்து மாற்றி அமைக்க வேண்டும் என்று மீனவர்களும், மீனவ பிரதிநிதிகளும் கோரிக்கை விடுத்தனர். இதனால் மீன்பிடி துறைமுக திட்ட அதிகாரிகள் அலை தடுப்புச் சுவரை நீட்டிக்கவும், உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளவும் ரூ.137 கோடியில் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசுக்கு அனுப்பி உள்ளனர். இது சம்பந்தமாக தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுக மேலாண்மை குழு உறுப்பினர் ஜாண் அலோசியஸ் கூறியதாவது: தேங்காபட்டிணத்தில் 2009ம் ஆண்டு மீன்பிடி துறைமுக பணி தொடங்கப்பட்டது.

முறையான ஆய்வு செய்யாமல் கட்டமைக்கப்பட்டதால் இயற்கை சீற்றங்களின்போது கட்டுமானம் சேதமடைந்தது, இதனால் சென்னை ஐ.ஐ.டி.யின் வழிகாட்டுதலின்படி பல முறை துறைமுகம் புனரமைப்பு பணிகள் செய்யப்பட்டது. என்றாலும் முறையான பாதுகாப்பு அம்சங்களுடன் வடிவமைக்கவில்லை. குறிப்பாக துறைமுக முகத்துவாரத்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர்களில் மேற்கு பகுதியை விட கிழக்கு பகுதி கடலுக்குள் சுமார் 50 மீட்டர் தூரம் அதிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மேற்கு பகுதியில் இருந்து அடித்து வரக்கூடிய மணல் மற்றும் நீரோட்டம் கிழக்கு தடுப்பு சுவரில் மோதி பெரிய நீர் சுழற்சி ஏற்படுவதும், மணல் துறைமுகத்தினுள் வந்து படிவதும் தொடர்கதையாகி வருகிறது.

 

மேலும் துறைமுக வாயிலில் இருந்து சுமார் 2 நாட்டிக்கல் மைல் தென்கிழக்கு பகுதியில் கடலில் அமைந்துள்ள பெரிய பாறை காரணமாக ஏற்படக்கூடிய நீர் சுழற்சி துறைமுக  முகத்துவாரத்தில் அலைகளின் தன்மையை மாற்றி அமைக்கிறது. இதனால் இந்த வருடம்  5 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் மீன்வர்கள் மனநிம்மதியான நிலையில் மீன்பிடிக்க செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தற்போது கேரள மாநிலத்தில் கடல் சார்ந்த திட்ட பணிகள் அனைத்தும் சென்னையை தலைமையிடமாக கொண்ட (என்ஐஓடி) தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப மையம் மூலமாக நல்ல பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறை படுத்தப்படுகிறது.

அது போன்று தேங்காபட்டிணம் மீன்பிடி துறைமுகத்தையும் தேசிய பெருங்கடல் தொழில் நுட்ப மையம் மூலமாக ஆய்வு மேற்கொண்டு நிரந்தரமான பாதுகாப்பு அம்சங்களுடன் மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்றார்.

Related Stories:

>