×

ஆஸ்திரேலிய ஓபனில் ஆடவில்லை: ரோஜர் பெடரர் பேட்டி

ஜூரிச்: ‘‘ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியில் ஆடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட பின்னர், நான் இன்னும் முழுமையாக குணமடையவில்லை. அதனால் 2021ம் ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் நான் பங்கேற்கவில்லை’’ என்று ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். ஸ்விட்சர்லாந்தின் டென்னிஸ் நட்சத்திரம் ரோஜர் பெடரர் (39), ஆடவர் ஒற்றையரில் 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதனை படைத்துள்ளார்.

 இந்த ஆண்டு பிப்ரவரியில் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்டார். அப்போது அவர் கூறுகையில், ‘‘ஜூலையில் நடைபெற உள்ள விம்பிள்டன் மற்றும் செப்டம்பரில் நடைபெற உள்ள யு.எஸ்.ஓபனில் கலந்து கொள்வேன். அதற்குள் முழுமையாக குணமடைந்து விடுவேன்’’ என்று கூறியிருந்தார். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள், முழுவதுமாக ரத்து செய்யப்பட்டன. இதையடுத்து கடந்த ஜூலையில் அதே இடது முழங்காலில் 2வதாக ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதனால் அடுத்து வந்த யு.எஸ்.ஓபனிலும் அவர் ஆடவில்லை. 2021 ஜனவரியில் துவங்க உள்ள ஆஸி. ஓபன் கிராண்ட்ஸ்லாமில் அவர் நிச்சயம் ஆடுவார் என்று செய்திகள் வெளியாகின.

இந்நிலையில் வரும் ஆஸி. ஓபனிலும் ஆடப்போவதில்லை என்று ரோஜர் பெடரர் தற்போது தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ‘‘ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாமில் ஆடுவது எனக்கு மிகவும் பிடித்தமான ஒன்று. ஆனால் 2வது அறுவை சிகிச்சைக்கு பின்னர் நான் முழுமையாக குணமடைந்து விட்டேன் என்று சொல்ல முடியாது. கொஞ்சம் கொஞ்சமாக பயிற்சி எடுத்து வருகிறேன். இப்போது அதுதான் என்னால் முடிகிறது.அதனால் வரும் ஆஸ்திரேலிய ஓபனில் நான் ஆடப்போவதில்லை. அந்த 3 வாரங்கள் ஓய்வு எனக்கு அவசியம் தேவைப்படுகிறது.

அதில் உடல் தகுதியை மேம்படுத்திக் கொள்ள விரும்புகிறேன். அதன் பிறகு விம்பிள்டன், தொடர்ந்து ஒலிம்பிக், அடுத்து வரும் யு.எஸ். ஓபன் ஆகிய போட்டிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறேன். 100 சதவீத உடல் தகுதியுடன் அந்த போட்டிகளில் பங்கேற்க வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.



Tags : Australian Open ,Roger Federer , Not playing at the Australian Open: Interview with Roger Federer
× RELATED ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடவர்...