×

மனைவி பிரசவத்திற்காக நாடு திரும்புவது முற்றிலும் தெளிவாக இருந்த ஒரு முடிவு: கேப்டன் விராட்கோஹ்லி பேட்டி

அடிலெய்ட்: ஆஸ்திரேலியா- இந்தியா அணிகளுக்கு இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியில் அடிலெய்ட்டில் இன்று தொடங்கியது. இதையொட்டி இந்திய கேப்டன் விராட் கோஹ்லி அளித்த பேட்டி:  நான் எப்போதும் நானாகவே இருக்க விரும்புகிறேன் எனத் தெரிவித்துக் கொள்கிறேன். எனது ஆளுமை, குணம் ஆகியவற்றின் மூலம் புதிய இந்தியாவின் பிரதிநிதியாக வெளிப்படுகிறேன். என்னைப் பொறுத்தவரை அதை அப்படித்தான் பார்க்கிறேன். என் மனதைப் பொறுத்தவரை, ஆஸ்திரேலியர்களின் மனநிலையோடு நான் என் மனதை ஒப்பிடுவதில்லை. என் ஆளுமை என்பது இந்திய கிரிக்கெட் அணிக்காக நாங்கள் தோள் கொடுக்கத் தொடங்கிய முதல் நாளில் இருந்தே வெளிப்பட்டு வருகிறது.

 புதிய இந்தியா என்பது சாதகமான எண்ணத்துடன், சாதிக்கும் மனதுடன் சவால்களை ஏற்றுக்கொள்ளும். எங்கள் வழியில் வரும் சவால்களையும் நாங்கள் ஏற்கத் தயாராக இருக்கிறோம்.  கிரிக்கெட் விளையாடுவதற்கு ஆஸ்திரேலியா சிறந்த நாடு. இந்த மண்ணில் நீங்கள் சிறப்பாக விளையாடினால், இந்த நாட்டு மக்கள் உங்களைக் கொண்டாடுவார்கள். மதிப்பாக நினைப்பார்கள். உதாரணத்துக்குக் கடந்த தொடரில் பும்ரா சிறப்பாகச் செயல்பட்டுத் திறமையை வெளிப்படுத்தியதால், இந்த முறை பும்ராவின் பந்துவீச்சைக் காண ஆஸ்திரேலிய மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள்.

அனைத்துவிதமான வெளிப்புறச் சக்திகளையும் நாம் கட்டுப்பாட்டில் வைக்க முடியாது. சில நேரங்களில் வெளிப்புறச் சக்திதான் இந்தத் தொடருக்குச் சிறந்த விளம்பரமாக இருக்கக்கூடும். ஆனால், எங்கள் நோக்கம் அனைத்தும் சிறப்பாக விளையாடுவதில் மட்டுமே இருக்கும். மேலும் மனைவி அனுஷ்கா சர்மாவின் பிரசவத்திற்காக நாடு திரும்புவது பற்றி கோஹ்லி கூறுகையில், இது என் மனதில் முற்றிலும் தெளிவாக இருந்த ஒரு முடிவு. உங்கள் நாட்டிற்காக நீங்கள் விளையாடுவதைப் போலவே, இது வாழ்க்கையில் மிகவும் சிறப்பு வாய்ந்த தருணம் மற்றும் எந்த  நிலையிலும் நீங்கள் அங்கு இருக்க விரும்பும் ஒன்று.

 முதலிடத்தில் உள்ள ஆஸி.க்கு எதிராக இந்திய அணியை ரகானே சிறப்பாக வழிநடத்துவார். அவர் உண்மையில் முன்னேற வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், அவர் இந்த வாய்ப்பை நிறைவாக செய்து மகிழ்விப்பார் என்று நினைக்கிறேன். விஹாரி பேட்டிங் செய்வதை பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன். அவர் மிகவும் உறுதியான வீரர், என்றார்.


Tags : country ,Virat Kohli ,childbirth ,interview , The wife's return to the country for childbirth was a decision that was absolutely clear: an interview with Captain Virat Kohli
× RELATED ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் கொண்டு வரப்படும்: பா.ஜ.க. தேர்தல் வாக்குறுதி!