×

ஈரோடு ஸ்ரீபதி அசோசியேட்ஸ் நிறுவனத்தில் ரூ.700 கோடி வரி ஏய்ப்பு கண்டுபிடிப்பு: வருமானவரித்துறை

ஈரோடு: ஈரோட்டில் கட்டுமான நிறுவனத்தில் நடந்த வருமான வரி சோதனையில் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்பந்த பணிகளை மேற்கொள்ளும் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை மேற்கொள்ளப்பட்டு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. ஈரோடு தங்கப்பெருமாள் வீதியில் உள்ளது ஸ்ரீபதி அசோசியேட் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம். இந்நிறுவனத்தில் ஸ்ரீனிவாசன், சேகர், பூபதி ஆகியோர் இயக்குனராக உள்ளனர். இந்நிறுவனம் கட்டுமான துறையில் புகழ்பெற்றதாக விளங்குகிறது. குறிப்பாக அரசின் ஒப்பந்தங்கள் பெற்று கட்டுமானத்தை மேற்கொள்கின்றனர்.

இதுதவிர்த்து போக்குவரத்து, ரியல் எஸ்டேட், மசாலா தயாரிப்பு, கல்குவாரி, திருமண மண்டபம் உள்ளிட்ட பல்வேறு தொழில்களில் இந்நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. கடந்த 14ம் தேதி கோவை, ஈரோடு, சேலம், மதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென இந்நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டனர். தொடர்ந்து 4 நாட்கள் இச்சோதனை நடைபெற்றது. 2வது நாள் நடைபெற்ற சோதனையில் 16 கோடி ரூபாயும், 3ம் நாள் நடைபெற்ற சோதனையில் 4 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டது. இந்நிறுவனம் தமிழகம் மட்டுமின்றி கர்நாடகாவிலும் கட்டுமான ஒப்பந்தங்கள் பெற்று தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் ஸ்ரீபதி அசோசியேட் நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட சொத்துக்களின் மதிப்புகள் ஆய்வு செய்யப்பட்டது. அச்சமயம் 700 கோடி ரூபாய் வரையில் சொத்து ஆவணங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக நிறுவனத்தின் இயக்குனர்கள் 3 பேரையும் நேரில் ஆஜராகும்படி வருமானவரித்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. 4 நாட்களாக நடைபெற்று வந்த வருமானவரித்துறையினரின் சோதனை நிறைவடைந்த நிலையில் ஆவணங்கள் சரிபார்ப்பு உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கை நடைபெற்று வருகிறது.

Tags : tax evasion ,Erode Sreepathy Associates: Income Tax Department , Erode, Sreepathy Associates, Rs 700 crore, tax evasion
× RELATED ஜிஎஸ்டி வரி ஏய்ப்பில் ஈடுபட்ட 42 போலி நிறுவனங்கள்: 3 பேர் கைது