×

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ரஜினிக்கு மீண்டும் சம்மன் அனுப்ப திட்டம்: ஜனவரியில் விசாரணைக்கு அழைக்க வாய்ப்பு என தகவல்

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விசாரணை தொடர்பாக நடிகர் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்பப்படும் என விசாரணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் ரஜினிகாந்திடம் ஜனவரியில் விசாரணை நடத்த ஒருநபர் விசாரணை கமிஷன் திட்டமிட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலை உள்படத் தூத்துக்குடியைச் சுற்றி உள்ள ஆலைகளால், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பல்வேறு ஆலைகள் ஏற்படுத்திய பாதிப்பு காரணமாகப் பலர் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

பல ஆண்டுகளாக இந்த குற்றச்சாட்டை முன் வைத்து வந்த தூத்துக்குடி மாவட்ட மக்கள், 2018ம் ஆண்டு வீதியில் இறங்கிப் போராடத் தொடங்கினர். மாவட்டமே தெருவில் இறங்கி போராட்டம் நடத்தி வந்த சூழலில், போராட்டத்தின் 100வது நாள் போராட்டக்காரர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட ஊர்வலமாகச் சென்றனர். அப்போது பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் போராட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் 10 வயது சிறுமி உள்பட 13 பேர் உயிரிழந்ததாகத் தமிழ்நாடு அரசு கூறியது.

காவல்துறை குறிபார்த்து மக்களைத் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டவுடன் நடிகர்கள், அரசியல்வாதிகள் என ஒரு படையே தூத்துக்குடி மக்களை நேரில் சென்று நலம் விசாரித்து விட்டு வந்தது. அதன் வழியே நடிகர் ரஜினிகாந்தும் தூத்துக்குடி சென்றிருந்தார். அங்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த போராட்டக்காரர்களை ரஜினி சந்தித்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டத்தின்போது, சமூக விரோதிகள் ஊடுருவியுள்ளனர். போலீசை மட்டும் குற்றம் கூறுவது தவறு. மக்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பதும் அவர்கள் தான்.

காவலர்களைத் தாக்கியவர்கள் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்ட சமூக விரோதிகளை உலகிற்கு காட்ட வேண்டும்.  ஒரு நபர் விசாரணையில் நம்பிக்கையில்லை என்று கூறி பரபரப்பைக் கிளப்பினார். இது தொடர்பாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் ரஜினிகாந்த் அதற்கு ஆஜராகாமல், அவர் தரப்பிலிருந்து விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தூத்துக்குடியில் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர்; வரும் ஜனவரி மாதத்துக்குள் ரஜினிகாந்துக்கு சம்மன் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும். சம்மன் அனுப்பி அவர் விசாரணை செய்யப்படுவார் என கூறினார்.


Tags : Rajini ,Tuticorin , Plan to send summons to Rajini again in Tuticorin shooting case: Information as an opportunity to call for an inquiry in January
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!