×

ஆஸ்திரேலியா டூ கைலாசா இலவச விமானம் சேவை: 3 நாட்கள் கட்டமிண்றி தங்கலாம்...நித்தியானந்தா அதிரடி அறிவிப்பு

டெல்லி: கைலாசா நாட்டிற்கு வருகை தர உள்ள பக்தர்களுக்கு ஆஸ்திரேலியாவிலிருந்து இலவச விமானம் சேவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார். நித்தியானந்தா மீது கொலை, கொலை முயற்சி, பாலியல் பலாத்காரம் உள்பட பல வழக்குகள் பிடதி போலீஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளதுடன் கர்நாடகா ராம்நகர் நீதிமன்றத்திலும் விசாரணை நடந்து வருகிறது. இதற்கிடையே, கைலாசா என்ற நாட்டை உருவாக்கியிருப்பதாக அறிவித்த நித்தியானந்தா, அவ்வப்போது வீடியோ மூலம் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில், கைலாசா பயணம் தொடர்பாக நித்யானந்தா பேசுவது போன்ற வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில், பேசிய நித்யானந்தா,
கைலாசா நாட்டிற்கு வருகை தர விரும்பமுள்ள பக்தர்கள் கைலாசாவின் மின்னஞ்சலில் விண்ணப்பம் செய்யலாம். கைலாசாவுக்கு சென்று வர எந்தவித கட்டணமும் இன்றி 3 நாள் விசா இலவசமாக வழங்கப்படும். மூன்று நாட்களுக்கு மேல் விசா வழங்கப்பட்டாது. ஆஸ்திரேலியா வரை வந்துவிட்டால் அங்கிருந்து இலவசமாக விமானத்தில் கைலாசா நாட்டிற்கு அழைத்து வரப்படுவர்.

ஆஸ்திரேலியாவில் இருந்து மட்டுமே இந்த சேவை என்பதால் கைலாசா வர விரும்புவர்கள் ஆஸ்திரேலியா வரை தங்களது சொந்த செலவில் வருகை தர வேண்டும். ஆஸ்திரேலியாவிலிருந்து கருடா என பெயரிடப்பட்டுள்ள கைலாசாவின் சிறிய விமானங்கள் மூலமாக கைலாசாவுக்கு எந்தவிதக் கட்டணமும் இன்றி அழைத்து வரப்படுவர்.

மேலும், 3 நாள் பயணத்தை முடித்து மீண்டும் ஆஸ்திரேலியா வர உணவு, தங்குமிடம் போன்ற வசதிகளும் போக்குவரத்து வசதிகளும் கைலாசா நிர்வாகத்தின் சார்பாக செய்து தரப்படும். கைலாசா வருகை தர விரும்பும் நபர்கள் தங்களின் முழு விவரங்களோடு கைலாசாவின் மின்னஞ்சலுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

ஒருவர் மூன்று நாட்களுக்கு மேல் கைலாசாவில் தங்க முடியாது. இந்த மூன்று நாட்களில், ஒவ்வொரு நாளும் என்னுடன் சேர்ந்து இறைவனை வழிபட வாய்ப்பு கிடைக்கும் என்றும் வீடியோவில் நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கைலாசா செல்ல இலவச விமான சேவையா? என்று நித்தியானந்தா ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.


Tags : Australia ,Kailash , Free Flight Service to Kailash: 3 Days Unrestricted ... Nithiyananda Action Notice
× RELATED தேர்தல் முடிந்துவிட்டதால் எந்த...