×

காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா?: அரசுக்கு ஐகோர்ட் கிளை கேள்வி

மதுரை: தமிழகத்தில் காவலர் பணியிடங்களை நிரப்புவதில் தாமதம் செய்வது ஏன் என்று உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா எனவும் அரசுக்கு உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியிருக்கிறது. தமிழக காவல்துறையில் காலி பணியிடங்களை நிரப்புவது, ஊதிய உயர்வு உள்ளிட்டவற்றை முறையாக செய்து தருவது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. காவலர் மாசிலாமணி என்பவர் மதுரை கிளையில் பொதுநல வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழக காவல்துறையினர் எவ்வித சூழலையும் கருத்தில் கொள்ளாமல் தொடர்ச்சியாக பணியாற்றுகின்றனர். வி.ஐ.பி.க்கள் வரும் காலங்களில் சாலை ஓரங்களில் நின்று பொதுமக்களை பாதுகாக்கும் பணியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழகத்தை பொறுத்தவரையில் 1000 பேருக்கு 2 பேர் என்ற விகிதத்திலேயே காவல்துறையினர் உள்ளனர். அவர்கள் குறைந்த ஊதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு  24 மணி நேரமும் பணியில் ஈடுபடும் தமிழக காவல்துறையினரின் ஊதியத்தை உயர்த்தி தர வேண்டும். காவல்துறையினரின் எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்த போது, தமிழக காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம் மற்றும் பிற மாநில காவல்துறையினருக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரங்கள், காவல்துறையினருக்கு தனி காப்பீடு உள்ளதா போன்ற கேள்வி எழுப்பி அது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் இந்த மனு நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அச்சமயம் அரசு தரப்பில் வழக்கு தொடர்பாக பதில் அளிக்க கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதையடுத்து மனு குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையின் போது மற்ற துறையை சார்ந்தவர்கள் போராட்டம் நடத்தி தங்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காண்கின்றனர்; ஆனால் காவலர்கள் போராடுவதில்லை. காவலர்கள் போராட்டத்தில் ஈடுபட முடியாது என்பதால் கோரிக்கைகளை நிறைவேற்ற தாமதம் செய்யலாமா? என கேள்வி எழுப்பி, நாளை பிற்பகலுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். அவ்வாறு தவறினால் தமிழக உள்துறை செயலர், தமிழக காவல்துறை தலைவர், காணொலி வாயிலாக ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கு விசாரணையை நாளை ஒத்திவைத்தனர்.


Tags : guards ,struggle ,government ,iCourt , Guard, Struggle, Claim, Delay, Icord Branch
× RELATED ஜீப்- அரசு பஸ் நேருக்கு நேர் மோதல்;...