×

பராமரிப்பு, போதிய கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் திருக்காட்டுப்பள்ளி காவிரி புதுப்பாலம்

திருக்காட்டுப்பள்ளி: திருக்காட்டுப்பள்ளியில் உள்ள காவிரி ஆற்றுப் புதுப்பாலம் பராமரிப்பு மற்றும் போதுமான கண்காணிப்பு இல்லாமல் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. திருக்காட்டுப்பள்ளி காவிரி ஆற்றில் பழைய பாலம் கட்டி 100 ஆண்டுகள் கடந்ததாலும், தொடர்ந்து கனரக வாகனங்கள் செல்வதாலும் பாலம் பலவீனமடையக்கூடும் என்பதால் இப்பாலத்துக்கு மேற்கே போக்குவரத்துக்கு என தனியாக காவிரி ஆற்றின் குறுக்கே பூண்டி- திருக்காட்டுப்பள்ளி சாலைகளை இணைக்கும் வகையில் உயர்மட்ட பாலம் ரூ.20 கோடியில் நபார்டு மற்றும் கிராம சாலைகள் திட்டத்தில் கட்டப்பட்டு 2014ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி திறக்கப்பட்டது.

இப்புதிய பாலம் வழியாக தான் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து திருவையாறு, கோவிலடி, கல்லணை, கும்பகோணம், லால்குடி, திருச்சி செல்லும் பயணிகள் பேருந்துகள், லாரிகள், வேன்கள், மினி பஸ்கள் உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்களும் செல்கின்றன. இப்பாலத்தில் இரவு நேரங்களில் ஒரு விளக்கு கூட எரிவதில்லை. இதனால் இரவு நேரங்களில் குடிமகன்களின் கூடாரமாக மாறி வருகிறது. பாலத்தின் நடைமேடைகளில் காலி மதுபாட்டில்கள் கிடக்கின்றன. பாலத்தின் மேல் பகுதியில் இரு சிமென்ட் பிளாக்குகளை இணைக்கும் இடங்கள் வெப்ப விரிவாக்கத்துக்காக இரும்பு பட்டைகள் பொருத்தப்பட்டுள்ளன. பாலத்தில் 21 இணைப்புகள் இதுபோல் உள்ளது. இதில் பாலத்தின் நடுபாகத்தில் உள்ள 11வது இணைப்பில் இருந்த இரும்பு பட்டைகளில் ஒன்றை சமூக விரோதிகள் பெயர்த்து எடுத்துள்ளனர். மேலும் பாலத்தின் இருபுறமும் மண் தேங்கி மழைநீர் வடியாமல் தேங்கி பாலத்தை வலுவிழக்க செய்கிறது.

இப்பாலம் திறக்கப்பட்டு 6 ஆண்டுகளுக்கு மேலாகியும் முறையாக நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைக்கவில்லை என்றும், இதனால் நெடுஞ்சாலை துறையினர் தொடர் பராமரிப்பு செய்ய முடியாமல் உள்ளது என்றும் தெரிகிறது.
பாலத்தை முறையாக நெடுஞ்சாலைத்துறையில் ஒப்படைத்து தொடர் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளவும், பாலத்தில் இரவு நேரங்களில் தொடர்ந்து விளக்குகள் எரிய ஏற்பாடும் செய்ய வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Thirukattupalli Cauvery New Bridge , Tirukkattuppalli
× RELATED பராமரிப்பு, போதிய கண்காணிப்பு...