×

வெட்ட தாமதமானதால் வயலிலேயே பூத்த கரும்புகள்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் செயல்படும் சர்க்கரை ஆலைகளை உரிய நேரத்தில் திறக்காததால், சரியான பருவத்தில் வெட்டப்படாத கரும்புகள், வயலிலேயே பூத்ததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தர்மபுரி மாவட்டத்தில் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், பொம்மிடி, பென்னாகரம், தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 10ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ளது. ஒருவருட பயிரான கரும்பு, 10வது மாதத்தில் இருந்து அறுவடை செய்யப்படுகிறது. இவை பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அரூர் கோபாலபுரம் சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், அரவைக்கு கொண்டு செல்லப்படுகிறது. கடந்த ஆண்டு கரும்பு சாகுபடி குறைந்ததால், பாலக்கோடு சர்க்கரை ஆலையில் அரவை நிறுத்தப்பட்டது. பாப்பிரெட்டிப்பட்டி சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை, ஒருசில மாதங்கள் மட்டும் இயங்கியது.

நடப்பாண்டு பரவலமாக மழை பெய்ததால், சாகுபடி செய்யப்பட்ட கரும்பு செழித்து வளர்ந்துள்ளது. இதனால் சர்க்கரை ஆலைகளை இயக்கவும், மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில், கரும்பு வெட்ட வேண்டிய பருவத்தில் வெட்டாததால், தர்மபுரி, அதியமான்கோட்டை, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி, பாலக்கோடு சுற்றுவட்டார பகுதியில், சுமார் 30ஏக்கரில் கரும்புகள் பூத்து குலுங்குகிறது. இதனால் கரும்பின் எடையும், பிழிதிறனும் குறையும் என விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆலை சரியான நேரத்தில் இயக்காததால், கரும்பு வெட்டாமல் நாட்கள் தள்ளி போனது. மேலும், பனிப்பொழிவு, வெயில், மழை என சீதோஷ்ண நிலை மாற்றத்தால், தற்போது கரும்பு பயிரில் பூக்கள் பூத்துள்ளது. இதனால் கரும்பின் எடை குறையும். இதனால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படும் நிலை உருவாகியுள்ளது,’ என்றனர்.

Tags : field , Cane
× RELATED மாரநேரி கிராமத்தில் உழவர் வயல் தினவிழா