திருச்செந்தூர் சாலையில் அடிக்கடி விபத்து: போக்குவரத்து நெரிசல்: ஆதிச்சநல்லூர் பாலம் அகலப்படுத்தப்படுமா?

செய்துங்கநல்லூர்: நெல்லை - திருச்செந்தூர் சாலையில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் பாலம் குறுகி காணப்படுவதால் அடிக்கடி விபத்தை சந்தித்து வருகிறது. இந்த பாலத்தை அகலப்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நெல்லை - திருச்செந்தூர் சாலை எப்போதும் போக்குவரத்து நிறைந்த சாலையாகும். திருச்செந்தூருக்கு செல்லும் பக்தர்கள் இந்த சாலை வழியாக தான் சென்று வருகின்றனர். தைப்பூசம், புத்தாண்டு, மாசித் திருவிழா, சித்திரை வருடப் பிறப்பு, வைகாசி விசாகம், கந்த சஷ்டி திருவிழா, ஆவணித் திருவிழா, வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் இந்தச் சாலை வழியாக பாதயாத்திரை பயணம் மேற்கொள்கின்றனர். இதனால் நெல்லை - திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவது வாடிக்கையாக உள்ளது.

இந்தச் சாலையில் செய்துங்கநல்லூர் - வைகுண்டம் இடையே ஆதிச்சநல்லூர் பரம்பு பகுதியில் குறுகலான பாலம் உள்ளது. இந்தப் பாலம் சுமார் 50 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்டது. ஆதிச்சநல்லூர் பரம்பு தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் கட்டுப்பாட்டுக்குள் வந்த பிறகு அந்த துறை அனுமதியின்றி சாலையை விரிவுபடுத்த இயலவில்லை. எனவே மிகவும் குறுகலான இந்தச் சாலையில் அடிக்கடி விபத்தும், போக்குவரத்து நெரிசலும் ஏற்படுவது தொடர்கிறது.

தற்போது இந்த பாலத்தை விரிவுபடுத்த தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ளது. ஆனாலும் பணிகள் துவங்கியதாக தெரியவில்லை. அதற்கான ஆரம்ப கட்ட வேலை கூட நடைபெறவில்லை. எனவே உடனடியாக பாலத்தை அகலபடுத்தும் பணியை துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து அப்பகுதியைச் சேர்ந்த சுடலையாண்டி, வெள்ளூர் கண்ணன் கூறுகையில், ‘‘திருச்செந்தூரில் திருவிழா நடைபெறும் சமயத்தில் இந்த பகுதியில் மிக அதிகமான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் பல மணிநேரம் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. தொல்பொருள் ஆராய்ச்சிக் கழகம் அனுமதி அளித்துள்ள நிலையில், நெடுஞ்சாலைத் துறை உடனடியாக நிதி ஓதுக்கீடு செய்து பாலத்தை விரிவுபடுத்தி கட்ட வேண்டும். காலம் தாழ்த்தினால் தொல்பொருள் ஆராய்ச்சி கழகம் அனுமதியை ரத்து செய்து விடக்கூடாது. எனவே உடனடியாக நெடுஞ்சாலை துறை இந்த பாலம் பணியை செயல்படுத்த வேண்டும்’’ என்றனர். அதிகமான போக்குவரத்து கொண்ட, அடிக்கடி விபத்து ஏற்படும் ஆதிச்சநல்லூர் பாலத்தினை விரிவுபடுத்துவது காலத்தின் கட்டாயமாகும்.

Related Stories:

>