திப்புசுல்தான் ஆண்ட முசுபராபாத் அந்தக்கால சங்குமலைதான் இப்போ நம்ம சங்ககிரி

‘‘நிகழ்வுகளை விட, அந்த நிகழ்வுகளால் பதிந்திருக்கும் நினைவுகளே என்றென்றும் நிலைத்திருக்கும் பொக்கிஷங்கள். இப்படி பண்பாடும், கலாச்சாரமும் நிலைத்திருக்கும் தமிழ்நிலத்தில் ஒவ்வொரு பகுதியும் அளப்பரிய பெருமைகளை கொண்ட அரிய பொக்கிஷமாக திகழ்கிறது. இந்த பகுதிகள் குறித்து நாம் அறிந்த, அறியாத தகவல்களை நினைவலைகளில் சுழல வைப்பதற்காக வருகிறது இந்த ‘பிளாஷ்பேக்,’’

‘கிரி’  என்றால் மலை. சங்கு போன்ற மலையே ஊரின் பிரதான அடையாளம் என்பதால் சங்குகிரி என்று அழைக்கப்பட்டது. அதுவே பிற்காலத்தில் மருவி சங்ககிரி என்று அழைக்கப்படுகிறது. சங்குமலை, குன்றத்தூர், சங்கிலிமலை என்ற பெயர்களாலும் முற்காலத்தில் சங்ககிரி அழைக்கப்பட்டுள்ளது. அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் சங்ககிரியின் சிறப்புகள் இடம் பெற்றுள்ளது. சங்ககிரி அருகேயுள்ள ஐவேலி என்னும் ஊரில் அசதி என்னும் இடையர் ஒருவர் வாழ்ந்தார். இவர் தமிழ்மூதாட்டி அவ்வைக்கு பொற்கலத்தில் விருந்து வைத்தார். இந்த அசதியை போற்றி, பன்னிரெண்டாம் நூற்றாண்டு கால, அவ்வையார் அசத்தி கோவை என்ற நூலில் குறிப்புகள் இருப்பதும் பெருமைக்குரியது.

கி.பி.13ம் நூற்றாண்டிலேயே சங்ககிரி, கொங்குநாட்டின் முக்கிய நகரமாய் விளங்கியதற்கு சான்றுகள் உள்ளது. 16ம் நூற்றாண்டில் இந்த ஊர், குன்றத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளது. கி.பி.1522ம் ஆண்டு கால திருச்செங்கோடு கல்வெட்டில் குன்றத்தூர் துர்க்கம் என்ற பெயரே குறிப்பிடப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் காலத்திலும், ஹைதர்அலி, திப்புசுல்தான் காலத்திலும் சங்ககிரி, ஒரு பெரும் நகரமாக விளங்கி உள்ளது.  கி.பி.1784 முதல் 1786வரை திப்பு சுல்தான் ஆண்ட போது, ‘முசுபராபாத்’ என்றும் சங்ககிரி அழைக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மாவட்டத்தின் முக்கிய நகரமாக சேலம் மாறும் (1823) வரை, சங்ககிரியே அரசியல், மிலிட்டெரிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இடமாக இருந்துள்ளது. இங்குள்ள மலைக்கோட்டையே இதன் இதயமாக திகழ்கிறது. 15ம் நூற்றாண்டில் விஜயநகர அரசர்களால் கட்டப்பட்ட இந்த கோட்டை, தமிழகத்தின் மிகப்பெரும் கோட்டைகளில் ஒன்றாக திகழ்கிறது. கோட்டையின் ஒவ்வொரு சுவடுகளும் வீரத்தையும், தியாகத்தையும், ஆன்மீகத்தையும்,  மெல்லிய கலைநுட்பத்தையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் இந்த கோட்டை சங்கரி துர்க்கம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. சங்ககிரி ரயில் நிலையத்தின் பெயர்பலகை தற்போதும் சங்கரி துர்க்கம் என்ற பெயரிலேயே இருப்பது இதற்கான சான்றாக விளங்குகிறது. ஆங்கிலேயர்களின் ஆட்சியில் ஜில்லாவாக திகழ்ந்த சங்ககிரியில் 1905ல் சுகாதார அமைப்பு உருவாக்கப்பட்டது. 1915ல் ஊராட்சியாக விரிவுபடுத்தப்பட்டது. தற்போது  பேரூராட்சியாக திகழ்கிறது. 1957ம் ஆண்டு சங்ககிரி சட்டமன்றத் தொகுதி உருவாக்கப்பட்டது.

 காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்ற, கே.எஸ்.சுப்ரமணியகவுண்டரை தொடர்ந்து நல்லமுத்து, வீ.முத்து, தனபால், வரதராஜன், சரோஜா, வி.பி.துரைசாமி, விஜயலட்சுமி பழனிசாமி, ராஜா வரை, பலரது குரல்கள் சட்டமன்றத்தில் மக்களுக்காக ஒலித்துள்ளது.

ஓமலூர் வட்டத்தின் தாரமங்கலம் பேரூராட்சி, இலவம்பட்டி, பணிக்கனூர், இடையப்பட்டி, பாப்பம்பாடி, தெசவிளக்கு, குருக்கம்பட்டி கிராமங்களோடு, சங்ககிரி முழுவட்டமும் இந்த தொகுதியில் அடங்கியுள்ளது. உழைக்கும் மக்கள் அதிகம் நிறைந்த சங்ககிரியில் இரும்பு உருக்காலைகளும், சிமென்ட் தொழிற்சாலைகளும் உள்ளது. ஆனாலும் ஆயிரக்கணக்கானோரின் வாழ்வாதாரமாக லாரி படிகட்டும் தொழிலும், அது சார்ந்த உப தொழில்களும் விளங்கி வருகிறது. இந்த தொழில்கள் மேலும் மேம்படுவதற்கான நவீன யுத்திகளோடு, ஊரின் கட்டமைப்புகளை மேம்படுத்தும் புதிய திட்டங்களை, அரசு வகுத்துக் கொடுத்தால் சேலத்தின் சிறந்த தொழில்நகரமாக சங்ககிரி உயர்ந்து நிற்கும் என்பது இங்குள்ள மக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.

Related Stories: