×

மாற்று வழியாக ஆந்திராவுக்கு செல்ல அறிவுறுத்தல்: தொடர் வெள்ளத்தால் பொன்னை ஆற்றுப்பாலத்தின் தூண் இடிந்தது

பொன்னை: தொடர் வெள்ளப்பெருக்கு காரணமாக பொன்னை ஆற்றுப்பாலத்தில் உள்ள தூண் திடீரென இடிந்தது. இதனால் போக்குவரத்துக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், மாற்று வழியாக ஆந்திராவுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு நிவர் புயல் காரணமாக பலத்த மழை பெய்தது. நிவர் கரையை கடந்த சில நாட்களுக்குள் புரெவி புயல் உருவானதால் வடமாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்தது. பல ஹெக்டர் விவசாய பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்தது. அதேவேளையில் பல ஆண்டுகளாக வறண்டு கிடந்த பாலாறு, அதன் கிளை ஆறுகள், ஏரிகள், குளங்கள், கன்மாய்கள் ஆகியவற்றில் தண்ணீர் நிரம்பியது. குறிப்பாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதேபோல், வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை பகுதியில் ஆந்திராவில் இருந்துவரும் கிளை ஆறுகள் மூலம் பொன்னையாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இது பாலாற்றில் சென்று கலக்கிறது. இந்த பொன்னை ஆற்றின் குறுக்கே கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு மேம்பாலம் கட்டப்பட்டது. பொன்னை- சித்தூர்-வேலூர் செல்லும் பிரதான சாலையாக உள்ளதால், இந்த மேம்பாலம் வழியாக பஸ், லாரி, கனரக வாகனங்கள் என நாளொன்றுக்கு ஆயிரக்கணக்கில் வாகனங்கள் சென்றுவருகின்றன.

இந்நிலையில், கடந்த 3 வாரங்களாக பாலத்தை தொட்டபடி வெள்ளம் ஓடிய நிலையில் நேற்று முன்தினம் மாலை வெள்ளம் வெகுவாக குறைந்தது. அப்போது பாலத்தின் நடுவே உள்ள அடிப்பகுதி தூண் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரியவந்தது. இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக பொதுப்பணித்துறைக்கு தெரிவித்து நேரில் ஆய்வு செய்ய உத்தரவிட்டது. அதன்பேரில் நேற்று காலை பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு சென்று பாலத்தை பார்வையிட்டனர். மேலும் பாலத்தின் வலிமை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.

அசம்பாவிதம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பஸ், லாரி உள்ளிட்ட அனைத்து கனரக வாகனங்கள் அவ்வழியாக செல்ல தடைவிதிக்கப்பட்டது. இதனால் ஆந்திராவுக்கு செல்லும் வாகனங்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளதால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாற்று வழியாக ஆந்திராவுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் டூவீலர்கள், ஆட்டோ, கார்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பாலத்தின் நிலை குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். பாலத்தை சீரமைக்கும் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆற்றுப்பாலம் உடைப்பு குறித்து உரிய நேரத்தில் தெரியவந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் கூறினர்.

Tags : Andhra ,floods ,river bridge , To flood
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்