×

உளுந்தூர்பேட்டையில் வெளுத்து வாங்கிய மழை: சுப்ரமணியசுவாமி கோயிலுக்குள் தண்ணீர் புகுந்ததால் பக்தர்கள் அவதி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை மற்றும் வண்டிப்பாளையம், ஆசனூர், எறையூர், செம்மணங்கூர், நகர், செங்குறிச்சி, பாதூர், குண்ணத்தூர், எறையூர், வடகுரும்பூர், புகைப்பட்டி, கூவாடு, பாலி உள்ளிட்ட கிராமங்களில் நேற்று அதிகாலை முதல் மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து காலை 6 மணியில் இருந்து 9 மணி வரை 3 மணி நேரம் மழை விடாமல் பெய்து வந்தது. இதனால் பொதுமக்கள் வீடுகளைவிட்டு வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது.

உளுந்தூர்பேட்டை நகர பகுதியில் உள்ள பேருந்து நிலையம் பகுதியில் மழைநீர் வெள்ளம்போல் சென்றது. மாவட்ட கல்வி அலுவலகம் மற்றும் சென்னை மெயின் ரோட்டில் உள்ள தாழ்வான பகுதிகளில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் வீடுகளில் வசித்து வந்தவர்கள் அச்சத்துடன் வீட்டில் புகுந்த மழைநீரை வெளியேற்றினர்.

கழிவுநீர் செல்லும் வாய்க்கால்களில் அடைப்பு ஏற்பட்டதால் பல தெருக்களில் மழைநீர் குடியிருப்பு பகுதியை சூழ்ந்தது. பழமையான ஸ்ரீசுப்ரமணியசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்ததால் பக்தர்கள் கோயிலுக்குள் சென்று வழிபட முடியாத நிலை ஏற்பட்டது. இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளிடம் பக்தர்கள் கூறியும் மழைநீர் வெளியே செல்வதற்கு வடிகால் வசதிகளை ஏற்படுத்தவில்லை என பக்தர்கள் புகார்கூறியுள்ளனர்.

Tags : Devotees ,Ulundurpet ,Subramanyaswamy , Ulundurpettai
× RELATED சிறுமியை ஆபாசமாக வீடியோ எடுத்தவர் கைது