×

9 மாதங்களுக்கு பிறகு கன்னியாகுமரியில் காட்சி கோபுரம் திறப்பு

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் 9 மாதங்களுக்கு பிறகு காட்சி கோபுரம் திறக்கப்பட்டுள்ளது சுற்றுலா பயணிகள் இடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு தற்போது சற்று குறைய தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழக அரசு ஊரடங்கில் அடுத்தடுத்து தளர்வுகளை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் நேற்றுமுன்தினம் முதல் சுற்றுலாத்தலங்கள், பொழுது போக்கு பூங்காக்களுக்கு மக்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி திற்பரப்பு அருவியில் 9 மாதத்துக்கு பிறகு மக்கள் குடும்பமாக ஆனந்த குளியல் போட்டனர். இதேபோல் மாத்தூர் தொட்டி பாலம், கன்னியாகுமரி ஆகிய சுற்றுலா தலங்களுக்கும் ஏராளமானோர் படையெடுக்க தொடங்கி உள்ளனர்.

சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சி கழகத்துக்கு சொந்தமான காட்சி கோபுரம் உள்ளது. இந்த காட்சி கோபுரமும் 9 மாதத்துக்கு பிறகு நேற்றுமுன்தினம் திறக்கப்பட்டது. இதையடுத்து ஏராளமான சுற்றுலா பயணிகள் உற்சாகமாக காட்சி கோபுரத்திற்கு சென்று கன்னியாகுமரியை கண்டு ரசித்து சென்றனர். இதேபோல் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை திரிவேணி சங்கமம் கடலில் நீராடி மகிழ்ந்தனர். இதேபோல் மக்கள் குடும்பம் குடும்பமாக பாறைக்கு மேல் நின்று நடு கடலில் நிற்பதுபோல் செட் செய்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர். ஊரடங்குக்கு பிறகு சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருப்பது பொது மக்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காந்தி மண்டபம் திறக்கப்படுமா?

கன்னியாகுமரி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை மிகவும் பிரபலமானவை. ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்ட போதிலும் இந்த 2 மண்டபங்களையும் திறக்க அரசு முறையாக அனுமதி அளிக்கவில்லை. இதேபோல் பழத்தோட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பூங்காவும் திறக்கவில்லை. இது சுற்றுலா பயணிகளுக்கு பெருத்த ஏமாற்றமாக உள்ளது. ஆகவே காமராஜர் மணிமண்டபம், காந்தி மண்டபம் ஆகியவற்றையும் உடனே திறக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : viewing tower ,Kanyakumari , Kanyakumari
× RELATED கன்னியாகுமரி மாவட்டத்தில் விசைப்படகு...